சேலத்திற்கும் ஈரோட்டிற்கும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் காவேரிப்பட்டி படித்துறைக்கும், கேசரிமங்கலத்திற்கு இடையேயும் பாலம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணைப்புப் பாலம் அமைப்பதன் அவசியம் குறித்தும், அவை இல்லாததால் பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவேரிப்பட்டி படித்துறைக்கும், அக்கரையில் உள்ள ஈரோடு மாவட்டம் கேசரிமங்கலத்திற்கும் இடையிலும் காவிரி ஆறு செல்கிறது. காவிரியில் தண்ணீர் குறைவாகச் செல்லும் போது அப்பகுதியை நடந்து கடந்து செல்லும் பொதுமக்கள், அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இரு பகுதிக்கும் இடையே சுமார் 400 மீட்டர் பாலம் இல்லாத காரணத்தினால் 20 கி மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாலம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் தொடங்கி விவசாயிகள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பு மக்களுமே குமாரபாளையம் மற்றும் கோனேரிப்பட்டி வழியாகப் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆற்றைக் கடந்து வருகின்றனர்.
அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி ஆகியோரிடம் அளித்த மனு கிடப்பிலேயே இருக்கும் நிலையில், பாலம் அமைக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை கனவாகவே போய்விடுமோ என்ற வேதனையையும் அப்பகுதி மக்கள் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இரு மாவட்டங்கைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பயணத்தை எளிதாக்க உதவும் வகையிலான பாலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
















