கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் நிறைவடைவதற்கு முன்பாகவே பூங்கா திறக்கப்பட்டதே இந்த நிலைக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை கடந்த நவம்பர் 25ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்பாகவே அவசரகதியில் திறக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
பெரும்பாலான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவதை காரணம் காட்டி அனுமதி மறுப்பதால் செம்மொழிப்பூங்காவை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். செம்மொழிப் பூங்காவின் முன் நுழைவு வாயில் முகப்பு தொடங்கி மாநாட்டு மையம், சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலை மட்டுமல்லாது, இப்பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகூடப் பெறவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
பூங்காவிற்கு வரும்பார்வையாளர்களுக்குத் தேவையானன உணவு, குடிநீர், கழிவறை ஆகிய அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் பூங்காவை அவசரகதியில் திறந்தது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதில் தொடங்கி தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு வரை பல்வேறு விதமான குழப்பங்கள் நிலவிவருகின்றன.
எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கி வைக்கும் முன்பு அதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
















