பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸை, நெட்ஃப்ளிக்சை வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படி சாத்தியமானது? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஹாலிவுட்டில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களில் உலகப்புகழ் பெற்ற நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். 1923ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 100 ஆண்டுகளை கடந்துள்ளது. அதிகப்பொருட்செலவிலான திரைப்படங்களைத் தயாரித்தல், விநியோகித்தல், வெப் சீரீஸ்களை எடுத்தல் உள்ளிட்ட சினிமா சார்ந்த பல்வேறு துறைகளில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
Superman, Batman, Aquaman, ஜோக்கர், Wonder Woman போன்ற dc கதாபாத்திரங்களைக் கொண்டு இந்நிறுவனம் அதிகப்படியான படங்களை எடுத்துள்ளது. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அத்துடன் HBO தொலைக்காட்சியும், hbo max செயலியும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான். இப்படி ஹாலிவுட்டில் அசைக்க முடியாத ஜாம்பவானாக வலம் வந்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யப்போவதாகக் கடந்த ஜூன் மாதம் அதன் உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து, அதனை வாங்க பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டன. குறிப்பாக, ஆரக்கிள் நிறுவனரான லாரி எலிசனின் மகனும், பிரபல தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் எலிசன் முக்கிய போட்டியாளராகக் களத்தில் இறங்கினார். எனவே, எப்படியும் இவர்தான் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றுவார் என அனைவரும் கருதினர். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மறைமுக ஆதரவும் அவருக்கு உள்ளதாகப் பேச்சு எழுந்தது. இந்தப் போட்டியில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இருந்தாலும், அதனை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு 5 சதவீதத்திற்கும் குறைவான வெற்றி வாய்ப்பே உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த ஏலத்தில் எப்படியேனும் வெற்றிப்பெற வேண்டும் என்ற முடிவில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் திடமாக இருந்தது. இது குறித்து பேசிய அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரியான Greg Peters, தாங்கள் வாங்குபவர்கள் மட்டுமல்ல, புதியவற்றை கட்டி எழுப்புபவர்கள் எனத் தெரிவித்தார்.
இருப்பினும் அந்தக் கூற்றை ஒரு கேலிப்பொருளாகத்தான் சக போட்டியாளர்கள் பார்த்தார்கள். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தை விற்றால்கூட, அதனால் வார்னர் பிரதர்ஸை வாங்க முடியாது எனக் கிண்டலும் எழுந்தது. இத்தகைய விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ளாத நெட்ஃப்ளிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு சில சலுகைகளை வழங்க முன்வந்தது. ஸ்டுடியோவை அதன் உரிமையாளர்கள் தொடர்ந்து நிர்வகிக்கலாம் என்பது அதில் முக்கியமான அம்சமாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இந்தப் போட்டியில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தற்போது வெற்றிப்பெற்றுள்ளது. சுமார் 7,200 கோடி டாலர்களுக்கு வார்னர் பிரதர்ஸை அந்நிறுவனம் வாங்கவுள்ளது. இது இந்திய மதிப்பில் 7 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்தத் தொகை 12 முதல் 18 மாதங்களில் தவணை முறையில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை பெரிய தொகைக்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த விற்பனையின் மூலம் ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தும் நெட்ஃப்ளிக்ஸ் வசம் செல்லவுள்ளன. அத்துடன், கேம் ஆப் த்ரோன்ஸ், The Sopranos, தி ஒயிட் லோட்டஸ் போன்ற உலக புகழ்பெற்ற தொடர்களையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இனி இவை அனைத்தும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விற்பனை செய்யப்படதற்கு பலரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இது பேரழிவை தரக்கூடிய இழப்பு எனக் கூறினார். அதேபோல், அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளின் கூட்டமைப்பான cinema united-ம் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளது. இருந்தபோதும், நெட்ஃபிளிக்ஸ் உரிமையாளர்கள் இந்த ஒப்பந்தம் மூலம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
“நாங்கள் தொடக்கத்தில் டிவிடிகளை தபால் மூலம் விற்பனை செய்தோம். பின்னர் படிபடியாக வளர்ந்து, ஓடிடி தளம் வரை உயர்ந்தோம். அமெரிக்கா தொடர்ந்து வளர்ச்சியின் பாதையில் பயணித்து வருகிறது. இதில் நாங்கள் மட்டும் தனித்திருக்க முடியாது. ஆகவே, நாங்களும் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறோம்” என நெட்ஃப்ளிக் நிறுவனத்தின் இணை ceo-வான Ted Sarandos மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
















