இந்திய- ரஷ்ய உறவு மேலும் வலிமை பெற்றிருக்கும் நிலையில், ஒரு இந்தியர் ரஷ்யாவில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்தச் சட்டமன்ற உறுப்பினர் ? அவர் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மருத்துவம் படிப்பதற்காக 1991ம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்ற பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த அபய் குமார் சிங் அந்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் ஆனதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என்று சொல்லிருக்கிறார். இந்தியாவில் லயோலா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அபய் குமார் சிங் ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
அதன் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய அபய் குமார் சிங், மீண்டும் ரஷ்யாவுக்குச் சென்று மருந்து வணிகத்தைத் தொடங்கியுள்ளார். கடின உழைப்பால், மருத்துவத் துறையில் மட்டுமின்றி கட்டுமானத் துறையிலும் வணிகத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். மிகக் குறுகிய காலத்திலேயே ரஷ்யாவின் குர்ஸ்க் நகரத்தில் ஒரு பிரபலமான வணிக ஆளுமையாக உயர்ந்தார். 2015ம் ஆண்டு அதிபர் புதினின் ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்யா கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் அபய் குமார் சிங்.
அதே ஆண்டு, குர்ஸ்கில் முதல் சர்வதேச யோகா தினத்தை வெகுசிறப்பாக நடத்தி இருந்தார். கட்சியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2017ம் ஆண்டு, குர்ஸ்க் நகர சட்டமன்றப் “பிரதிநிதி” பதவிக்குப் போட்டியிட்டு அதிகமான வாக்குகள் பெற்று அபய் குமார் சிங் வெற்றிப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம், ரஷ்யாவில் பொதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.
பொதுவாகவே, ரஷ்யாவில், எந்தச் சட்டமன்ற உறுப்பினரும் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொள்வதில்லை. ஒரு குறிப்பிட்ட சம்பிரதாய அம்சமாகப் பெரும்பாலும் ரஷ்ய அரசியல்வாதிகள் பொதுமக்களிடமிருந்து சற்று விலகியே இருக்கிறார்கள். எனவே, முதன்முதலாகத் தாம் தேர்தலில் போட்டியிட்டபோது, ரஷ்ய தேர்தல்களிலேயே முதல் முதலாக இந்திய அரசியல் பாணியைக் கையிலெடுத்ததாக அபய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் பல பொதுக் கூட்டங்களை நடத்தியதாகவும், உள்ளூர் மக்களுடன் தொடர்ந்து உரையாடி வந்ததாகவும் அதனாலேயே குர்ஸ்க் மக்கள் தமக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்ததாகவும் கூறியுள்ளார். உணர்வுப் பூர்வமாக மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக, அபய் குமார் சிங், மாதந்தோறும் ஜந்தா தர்பார் என்ற பெயரில் மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன் மூலம் குர்ஸ்க் நகர மக்கள் அனைவருக்கும் உதவி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, 2022ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் குர்ஸ்க் மக்கள் அபய் குமார் சிங்கையே தேர்ந்தெடுத்துள்ளனர்.
வெளிநாட்டினருக்கு குறிப்பாக இந்தியர்களுக்குக் குடியேற்ற வாய்ப்புக்களைத் தடுக்கும் வகையில் H 1B விசா கட்டுப்பாடு என அமெரிக்கா நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், ரஷ்யாவில் திறமையான இந்தியர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்க படுவதாக, அபய் குமார் சிங் குறிப்பிட்டுள்ளார்.
‘காலில் ஜப்பானின் காலணிகள்; உடலில் இங்கிலாந்தின் ஆடைகள்; தலையில் ரஷ்யாவின் தொப்பி ; ஆனாலும் இதயத்தில் இந்தியன் என்ற உணர்வு ‘ என்று பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் பாடியது போல, பாஸ்போர்ட்டில் வேண்டுமானால் தாம் ரஷ்யனாக இருக்கலாம்; ஆனால் இதயத்தில் இந்தியர் என்ற உணர்வுடனே இருப்பதாக அபய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
நெப்போலியனையும் ஹிட்லரையும் பின்வாங்கச் செய்த குர்ஸ்க் நகரம் ஒரு இந்திய வம்சாவளியினரை தனது அரசு பிரதிநிதியாகச் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருப்பது இந்தியாவின் பெருமை என்றே கூறலாம்.
















