பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நிறுவனமான பைனான்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர். இது தேசிய பாதுகாப்பு விளைவுகள் குறித்து சர்வதேச அளவில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இதுபற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்..
பாகிஸ்தானில் சமீப காலமாக நடைபெற்று வரும் பல அரசியல் மற்றும் நிதி மாற்றங்கள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியாக ஆசிம் முனீர் பொறுப்பேற்றது முதல் மேற்கொள்ளப்பட்டு வரும், அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் அந்நாட்டின் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதன் அவசியத்தை இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.
குறிப்பாக ஆசிம் முனீர் பதவியேற்ற மறுநாளே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், ஐ.எஸ்.ஐ தலைவர் ஆசிம் மாலிக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், உலகின் முன்னணி கிரிப்டோ நிறுவனமான பைனான்ஸின் CEO ரிச்சர்ட் டெங் உடன் இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அனுப்புபவரின் பெயரோ, பெறுபவரின் பெயரோ வெளியே தெரியாமல் கிரிப்டோவை பரிவர்த்தனை செய்ய முடிவதால், அதனை நாட்டிற்குள் நுழைய விடுவது ஆபத்து எனப் பாகிஸ்தான் அரசு எண்ணியது.
நாளுக்கு நாள் கிரிப்டோவின் மதிப்பு ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்படுவதால், அதனை நம்பி முதலீடு செய்யும் மக்கள் தங்கள் பணத்தை இழக்கும் வாய்ப்பும் அதிகளவில் இருப்பதாகக் கருதப்பட்டது. இது தவிர சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, நிதி திருட்டு, தீவிரவாத குழுக்களுக்குப் பணம் அனுப்புதல் போன்ற சட்ட விதி மீறல்களுக்குக் கிரிப்டோவை பயன்படுத்த வாய்ப்புள்ளதால், தற்போது வரை கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தப் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தான் மத்திய வங்கி கட்டுப்பாட்டில் உள்ள நிதி மேலாண்மை அமைப்புகளில் கிரிப்டோ தடை செய்யபட்டுள்ள போதிலும், ரிச்சர்ட் டெங் உடனான சமீபத்திய சந்திப்பு அந்நாட்டு அரசு வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சொத்துச் சுழலை உருவாக்குவதில் நாட்டம் கொண்டுள்ளதை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இதனுடன் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதை ஒப்பிட்டுப் பார்த்தால், உலகளவில் அரசியல் ரீதியாகவும் இந்த நிகழ்வு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரம்ப் குடும்பத்தார் பங்கு வைத்திருப்பதாகக் கூறப்படும் World Liberty Financial நிறுவனத்துடன் ஏற்கனவே பாகிஸ்தான் உடன்படிக்கை செய்துள்ள நிலையில், பைனான்ஸ் நிறுவன CEO-வுடனான இந்தச் சந்திப்பு பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. டிரம்ப் – முனீர் உறவின் புதிய அங்கமாகக் கிரிப்டோ இடம்பெறுவது இந்தச் சந்திப்பின் அரசியல் பின்னணிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தெற்காசிய அரசியல் ஆய்வாளர் மைக்கெல் கூகெல்மேன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் மத்திய வங்கியும், பாதுகாப்பு அமைப்புகளும் கூறிவந்த கிரிப்டோவால் ஏற்படும் சிக்கல்களை களைய, பைனான்ஸ் நிறுவனம் உதவவுள்ளதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாகப் பாகிஸ்தானில் ஆண்டுக்கு 250 பில்லியன் டாலர் அளவுக்குக் கிரிப்டோ வர்த்தகம் நடைபெறுவதாக மதிப்பிடப்படுள்ளதால், அவற்றை தண்டனையின்றி ஒழுங்குபடுத்தப்பட்ட தளங்களுக்கு மாற்ற அம்னஸ்ட்டி என்ற திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், தங்கள் தளத்தில் பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான டிஜிட்டல் சொத்துக்களை, பாகிஸ்தான் நிதி அமைப்போடு சேர்க்க வேண்டும் என பைனான்ஸ் நிறுவனம் தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பைனான்ஸ் நிறுவனம், முன்பு அமெரிக்காவில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் சிக்கி பல பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியுள்ளது. அதன் நிறுவனரான சாங்பெங் சாவோ இந்த வழக்கில் தண்டனை பெற்றார். இத்தகைய சூழலில் பாகிஸ்தான் அதே சாவோவைத்தான், அந்நாட்டின் கிரிப்டோ கொள்கைகளுக்கான ஆலோசகராக நியமித்துள்ளது.
இது இந்த முயற்சியின் நோக்கம் மற்றும் எதிர்கால விளைவுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலையில், கட்டுப்பாட்டு அமைப்புகள் பலவீனமாக உள்ள சூழலில் கிரிப்டோவின் வேகமான வளர்ச்சி, வரி தவிர்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம், நிதி பதுக்கல் போன்ற அபாயங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
















