இமயமலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மாபெரும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இமயமலையின் பெரும்பாலான பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகளவில் ஜப்பான் மற்றும் நேபாளத்துக்குப் பிறகு மூன்றாவது பெரிய நிலநடுக்க பாதிப்புக்கு அதிகம் வாய்ப்புள்ள நாடாக இந்தியா உள்ளது. கடந்த 50 மில்லியன் ஆண்டுகளில் இமயமலையில் மலைகளை உருவாக்கிய இந்தியா-ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய டெக்டோனிக் தகடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் வெளிப்பாடே நிலநடுக்கங்கள் என்று நில அதிர்வு நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக இமயமலைப் பகுதி உலகளவில் மிகவும் நில அதிர்வு செயலில் உள்ள மண்டலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. அதன்படி, இதுவரை இமயமலைப் பகுதிகள் மண்டலம் நான்கு மற்றும் ஐந்து எனப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் பூமிக்கடியில் நடக்கும் மாற்றங்கள் அப்படி மட்டுமே பிரித்துப் பார்ப்பதில்லை. கடந்த 200 ஆண்டுகளாக மத்திய இமயமலைப் பகுதிகளில் பெரிய நிலநடுக்கம் ஏற்படவில்லை என்பதால், அந்தப் பகுதிகள் நிலநடுக்க ஆபத்து குறைவு எனப் பழைய வரைபடங்கள் குறிப்பிட்டிருந்தன. முதல்முறையாக இந்தியாவின் புவியியல் வரைபடத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது வெறும் கோடுகளின் மாற்றம் அல்ல; மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாகும்.
இந்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்டிருக்கும் புதிய நிலநடுக்க வடிவமைப்பு விதிகளின்படி, நாட்டின் 61 சதவீதம் நிலப்பரப்பு இப்போது மிதமான முதல் அதிக நிலநடுக்க ஆபத்து வரையிலான பகுதியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மத்திய இமயமலை பகுதியும் மண்டலம் ஆறு என்ற வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்த இமயமலையும் நிலநடுக்க ஆபத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 முக்கிய நகரங்கள் மண்டலம்-5க்குள் வருகின்றன, மேலும் தேசிய தலைநகரான டெல்லியும் மண்டலம்-4-ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. நில அதிர்வு ஆய்வாளர்கள் ரிக்டர் அளவில் எட்டு என்று சொல்லக்கூடிய நிலநடுக்கத்தை இமயமலை இதுவரை கண்டதில்லை எனக் கூறுகின்றனர். 2005-ல் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8700 பேர் பலியானார்கள். மற்றும் 2015-ல் நேபாளத்தில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுமார் 8,900 க்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களைப் பறித்தது.
இந்திய டெக்டோனிக் தட்டு இமயமலைக்கு அடியில் ஒரு குறிப்பிடத் தக்க பிளவு வழியாக ஆண்டுக்குச் சுமார் 1.8 சென்டிமீட்டர் என்ற விகிதத்தில் நகர்கிறது. பூமிக்கு அடியில் இந்திய தட்டு ஒவ்வொரு ஆண்டும் 5 செண்டி மீட்டர் வரை மேல்நோக்கி நகர்கிறது. இது யூரேசியத் தட்டுடன் இடைவிடாமல் மோதுவதால் இமயமலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. 700 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதி டெக்டோனிக் அழுத்தத்தின் கீழ் உள்ளதால் வரும் ஆண்டுகளில் பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அது ரிக்டர் அளவில் 8க்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டேராடூன் முதல் காத்மாண்டு வரை எங்கும் பூகம்பம் ஏற்படலாம் என்றும், மேலும் அதன் தாக்கம் மொத்த கங்கை சமவெளிகளிலும், டெல்லி, சிம்லா, பாட்னா போன்ற இந்திய நகரங்களிலும் உணரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், பீகார், மணிப்பூர், அசாம், நாகாலாந்து மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் டெல்லி, குருகிராம், டெல்லி-என்.சி.ஆர், சோஹ்னா, மதுரா மற்றும் டெல்லி-மொராதாபாத் பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இமயமலை பூகம்பம் தவிர்க்க முடியாதது என்றாலும் அது என்று எங்கே என்பது தான் இன்னும் தெரியவில்லை. சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்டதைப் போலவோ அதைவிட அதிகமாகவோ விரைவில் இமயமலைக்கு அடிவாரத்தில் இருக்கும் உத்தரகாண்டில் பெரிய நிலநடுக்கம் எந்த நேரத்திலும் நிகழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் “உடனடியாக” இருக்கும் என்றும் அது “எந்த நேரத்திலும்” நிகழலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நில அதிர்வு அறிவியலின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணசந்திர ராவ் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் நகர்ப்புறங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் இந்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வரைபடம் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே உள்ளது. ஜப்பான் நில நடுக்கம் அச்சுறுத்தலுக்குத் தயாராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் இந்தியாவும் அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
















