தமிழ் திரையுலகம் அண்மை காலமாகக் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இதர சில காரணங்களாலு கோலிவுட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
தமிழ் திரையுலகம், அதாவது கோலிவுட், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், இதுவரை இல்லாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. திரைப்படங்களுக்கான தயாரிப்புச் செலவுகள் அளவுக்கு மீறி உயர்ந்து வரும் சூழலில், திரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது திரையுலகினரை திக்குமுக்காட செய்துள்ளது. அதேபோல, OTT தளங்கள் உருவாக்கிய புதிய சந்தை நடைமுறைகளும் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
இதன் விளைவாகத் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் கூடக் கடும் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால் இவர்கள் அனைவருக்கும் இந்தக் காலகட்டம் தமிழ் திரைத்துறையின், எதிர்கால பாதையைத் தீர்மானிக்கும் முக்கிய தருணமாக மாறியுள்ளது. வழக்கமாக ஆண்டிறுதி காலங்கள் திரைத்துறைக்கு அதிக வசூலை அள்ளித் தருவது வாடிக்கை. ஆனால், நடப்பாண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, வரலாற்றில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள திரையரங்க உரிமையாளர்கள், இதனை முன்னெப்போதும் இல்லாத பேரழிவு என விவரித்துள்ளனர். இந்த நெருக்கடியான நிலை வரும் 2026-ம் ஆண்டிலும் தொடரும் எனத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக ஜனவரியில் 2 அல்லது 3 படங்கள் மட்டுமே வெளியாகவுள்ள நிலையில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எந்தவொரு படங்களும் வெளிவரத் தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார். சிற்றூர்களில் பல திரையரங்குகள் மூடப்பட்டு, அதன் உரிமையாளர்கள் தங்கள் தொழிலை காப்பாற்றிக்கொள்ள பிறரிடம் உதவி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் படங்கள் வெளியான 4 வாரங்களுக்குள், அவை OTT தளங்களில் வெளியாகிவிடுவதும் இந்தச் சூழ்நிலைக்கு மற்றொரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
குறிப்பாகத் திரைப்படங்களை OTT தளங்களில் வெளியிடக் குறைந்தபட்சம் 8 வாரங்கள் இடைவெளி வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகத் திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு மாதத்திற்குள் வீட்டிலிருந்தபடியே புதிய திரைப்படங்களை பார்த்து விடலாம் என்ற எண்ணம், ஏன் திரையரங்கிற்கு சென்று பணத்தை விரையமாக்க வேண்டும் என்ற மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இதனால் ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் ஆதரவாக இருந்த OTT தளங்களே, இப்போது அவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன.
குறிப்பாக OTT தளங்கள் விதிக்கும் பல புதிய கட்டுப்பாடுகளால், பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்குக் கூட கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 40 முதல் 50 சதவீதம் குறைவான தொகையே வழங்கப்படுகிறது. இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் பல நடிகர்களின் அளவுக்கு மீறிய சம்பள கோரிக்கைகளும் தயாரிப்பாளர்களை நிர்கதிக்கு தள்ளுகின்றன. இதனால் அண்மையில் பல தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் 150 முதல் 300 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கும் நடிகர்களுக்குத் தற்போது படங்களே கிடைப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டில் திரைப்படங்களே இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளதால் கடைசி முயற்சியாக திரையரங்க உரிமையாளர்கள் ஒரு ஒன்றிணைந்த முடிவுக்கு வர தயாராகி வருகின்றனர். அதன்படி, வரும் ஜனவரி முதல் திரையரங்குகளில் வெளியாகும் எந்தவொரு படமும், 8 வாரங்களுக்கு பிறகே OTT-யில் வெளியிடப்பட வேண்டும் என்ற கடும் நிபந்தனையை விதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே தங்கள் தொழிலை காப்பாற்ற இருக்கும் ஒரே வழி எனவும் அவர்கள் நம்புகின்றனர்.
















