சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள், உளவு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதால் மேற்கத்திய நாடுகள் கவலையடைந்துள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.
சீனாவில் தயாரிக்கப்படும் மின்சாரக் கார்கள் மற்றும் பேருந்துகள், நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்படுவதால், உலகின் பல நாடுகளில் அவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த வாகனங்களில் உள்ள டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பம், மைக்ரோஃபோன், சென்சார் மற்றும் இணைய இணைப்பு போன்ற அம்சங்கள் பயனர்களை வெகுவாக ஈர்ப்பதால் அவற்றை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில், சீனாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற அம்சங்கள் மூலம் பல முக்கிய தகவல்களைச் சேகரிக்கவும், உளவு பார்க்கவும் வாய்ப்புள்ளதால், இதுபோன்ற வாகனங்கள் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்ற கருதப்படுகிறது.
மேலும், மென்பொருள் புதுப்பிப்பு வசதி காரணமாக அவற்றைத் தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியும் என்பதால், அவசரக் காலங்களில் போக்குவரத்து அமைப்பே இதன் மூலம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நிபுணர்கள் தெரிகின்றனர்.
கம்யூட்டர்கள் சக்கரங்கள் மீது ஓடுவது போன்ற வடிவமைப்பு கொண்ட இந்த வாகனங்கள் சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம், அந்த நாடுகளின் பாதுகாப்புத்துறைச் சார்ந்த அதிகாரிகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இந்தச் சீன வாகனங்களை “கண்காணிப்பு சாதனங்களுடன் கூடிய வாகனங்கள்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் பொறுப்பாளர் மார்கரேத்தே வெஸ்டேகர் வர்ணித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் பெருமளவில் ஐரோப்பிய சாலைகளில் இயங்கி வருவதால், சீனாவுடன் மோதல் போக்கு உருவானால் அந்த வாகனங்கள் மூலம் தேச விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோல, டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளில் இயங்கி வந்த சீனத் தயாரிப்பு பேருந்துகளில், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால், அதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்து நிறுவனங்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பேருந்துகள் ‘OVER THE AIR’ தொழில்நுட்பம் மூலம் புதுப்பிக்கப்படுவதால், உற்பத்தியாளரோ அல்லது ஹேக்கர்களோ அவற்றைத் தொலைதூரத்தில் இருந்து நிறுத்த வாய்ப்புள்ளதாக அந்நாடுகளின் அதிகாரிகள் எச்சரித்துள்ளர். இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் அமெரிக்காவிலும் சீன வாகனங்கள் மீதான கவலைகள் தீவிரமடைந்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்காவின் செனட் சபை நடத்திய விசாரணையின்போது, சீன அரசு வழங்கும் பெரும் மானியங்கள், விநியோகச் சங்கிலி கட்டுப்பாடு மற்றும் போட்டியாளர்களை ஒதுக்கும் நடைமுறைகள், அந்நாட்டை உலகின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சீனாவின் கார் உள்ளிட்ட வாகனங்கள், நாட்டின் பொருளாதாரத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் என்றும் செனட் சபை எச்சரித்துள்ளது.
சீனாவின் டிக்-டாக் செயலியைப் போலவே அந்நாட்டின் வாகனங்களிலும் ஆபத்து நிறைந்திருப்பதாக விளக்கியுள்ள துறைச் சார்ந்த நிபுணர்கள், இவற்றை ஒருமுறைப் பயன்படுத்திவிட்டால் அதிலிருந்து விலகுவது மிகக் கடினம் எனத் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தின் முக்கிய போக்குவரத்து சாதனமாக மின்சார வாகனங்கள் மாறி வரும் நிலையில், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தச் சந்தையை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்பதே தற்போது உலக நாடுகளின் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
















