அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது, அணுசக்தி தொடர்பான சாந்தி மசோதா. அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்கள்தொகை பெருக்கம், அதிகளவிலான தொழிற்சலைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால், இந்தியாவின் மின்உற்பத்தி, அந்த தேவையை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. எனவே, அணுஉலைகளை அதிகளவில் அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
நிலக்கரி உள்ளிட்டவை மூலம், மின்சாரம் தயாரிக்கப்படும்போது, கார்பன் டை ஆக்ஸைடு அதிகளவில் வெளியேறுகிறது. அவை சுற்றுசூழல் மாசடைவதற்கு காரணமாக அமைக்கின்றன. ஆனால், அணுஉலைகள் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்யும்போது, சுற்றுச்சூழல் மாசடையும் சதவீதம் மிகவும் குறைகிறது. எனவே, அணுஉலைகள் மூலம் உற்பத்தியாகும் ஆற்றல் தூய ஆற்றல் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த அணுஆற்றலை இந்தியாவில் மத்திய அரசு மட்டும்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என 1962ம் ஆண்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதுதான் இன்று வரை அமலில் உள்ளது. 2047ம் ஆண்டுக்குள் அணுஉலைகள் மூலம் 100 ஜிகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்வது என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 100 ஜிவாவாட் என்பது இலக்காக இருந்தாலும், தற்போதுவரை 8.8 ஜிகாவாட் என்ற அளவில்தான் இந்தியாவின் அணுஆற்றல் உற்பத்தி உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கை எட்ட வேண்டும் என்றால், கட்டாயம் தனியார் பங்களிப்பை அனுமதித்தே ஆக வேண்டும்.
அதேபோல, அணுஉலைகள் தொடர்பாக 2010ம் ஆண்டு மேலும் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி அணுஉலைகள் வெடித்தாலோ, அவற்றில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டாலோ, அதனை வழங்கிய நிறுவனங்கள்தான் முழுக்க முழுக்க பொறுப்பு என அந்தச் சட்டம் தெரிவித்தது. இதன் காரணமாக வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு அணுஉலையை வழங்கத் தயக்கம் காட்டி வந்தன.
இந்தச் சூழலில், இந்த 2 சட்டங்களிலும் மத்திய அரசு தற்போது திருத்தம் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசு மட்டுமல்ல, இனி தனியார் நிறுவனங்களும் உணு உலைகளை அமைக்கலாம், நிர்வகிக்கலாம், அணுஆற்றலை உற்பத்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அணுஆற்றல் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது இதுவரை இயலாத காரியமாக இருந்து வந்தது. அதிலும் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அணுஆற்றல் துறையில் 49 சதவீதம் வரை அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அணுஉலைகளில் இனி ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதனை விற்பனை செய்த நிறுவனங்களுக்குப் பதிலாக, அதனை நிர்வகிக்கும் நிறுவனங்கள்தான் பொறுப்பு எனப் புதிய சட்டம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு அணுஉலைகளை விற்பனை செய்ய முன்வரும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் அமைக்கப்படும் அனைத்து அணுஉலைகள் அனைத்தும் கட்டாயம் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும், அணுஉலைகள் சார்ந்து வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்பன போன்ற அம்சங்களும் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தமாற்றங்கள்மூலம், 2047ம் ஆண்டுக்குள் இந்தியா 100 ஜிகாவாட் அணுஆற்றல் உற்பத்தி இலக்கை எட்டும் சூழல் உருவாகியுள்ளது.
















