மார்கழி மாதத்தில் நாட்டிய விழாக்களில் ஒருபகுதியாகச் சென்னை மியூசிக் அகாடமியில் ஜனவரி 3-ஆம் தேதி நாட்டிய சங்கல்பா நடனப் பள்ளி சார்பில் காருண்ய காவ்யா நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. இந்தத் தருணத்தில் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவரும், பரத நாட்டிய கலைஞருமான ஊர்மிளா சத்ய நாராயணனின் கலைப் பயணம்பற்றிப் பார்ப்போம்.
பரதம் என்பது ஒரு வாழ்க்கை முறை, நடனம் இல்லாமல் என் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கவே முடியாது என்கிறார் பரதநாட்டிய கலைஞரான ஊர்மிளா சத்ய நாராயணன். அந்தளவுக்கு பரதம் என்பது தன் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவே மாறிவிட்டது என்கிறார் அமைதியான குரலில். குடியரசுத் தலைவரின் கைகளால், சங்கீத நாடக அகாடமி விருதுப் பெற்றவர், கலைமாமணி விருதுக்கு அழகு சேர்த்தவர் என்று பரத நாட்டியத்திற்கு அவர் ஆற்றிய பங்கைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரத நாட்டியத்தில் சாதித்து வரும் ஊர்மிளா சத்ய நாராயணன், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரதத்தை கொண்டு சேர்த்தவர்… புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரான இவர், கலை வடிவத்திற்கு தனித்துவமான, முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றும் நோக்கில் நாட்டிய சங்கல்பா என்ற பெயரில் 30 ஆண்டுகளாக நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறார். தனது நாட்டியம் அரங்கேற்றமாகி 50 ஆண்டுகளைத் தொட்டுவிட்டதை எண்ணி பெருமிதமும் கொள்கிறார்.
இந்தச் சிறப்பான சூழலில், அவரது நாட்டியப் பள்ளி சார்பில், சென்னை மியூசிக் அகாடமியில் ஜனவரி 3ம் தேதி காருண்ய காவ்யா என்ற நாட்டிய நாடக அரங்கேற்றம் நடைபெறவுள்ளது… இந்த நிகழ்ச்சிக்கு, இசையமைப்பாளர் எம்பார் கண்ணன் இசையமைக்கிறார். இதற்காகச் சுமார் 60 பரத நாட்டிய கலைஞர்கள் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
பரத நாட்டியத்தை ஒரு பெருங்கடல் என வர்ணிக்கும் அவர், அதில் தாம் சிறுதுளியே என்கிறார். நடனம் மட்டுமல்லாமல், நடனக் கோட்பாடு, கர்நாடக இசை, யோகா ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களை உருவாக்குவதே தனது குறிக்கோள் என்றும் கூறுகிறார். ஆண்டாள் நாச்சியாரை நினைவுகூரும் மார்கழி தமிழ்நாட்டிற்கே திருவிழா போன்றது என்று கூறும் அவர், மார்கழி மாதம் கலைஞர்களுக்கு அங்கீகாரமும், ஊக்கமும் தரும் மாதம் என்கிறார் உற்சாகமாக…. சென்னை மியூசிக் அகாடமியால் பரத நாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய நடன கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க நிருத்ய கலாநிதி விருது ஊர்மிளா சத்ய நாராயணனுக்கு வழங்கப்பட உள்ளது.
இதனை தாழ்மையுடனும், நன்றியோடும் ஏற்றுக் கொள்வதாகக் கூறும் ஊர்மிளா சத்ய நாராயணன், பரத நாட்டியத்தை இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும், ரசிக்க வேண்டும், என்பதுதான் தனது இலக்கு என்கிறார்…. 50 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டே இருக்கும் ஊர்மிளா சத்ய நாராயணனின் நாட்டிய பாதச்சுவடுகள் பரத நாட்டியக் கலையின் உயிரோட்டம் என்றே கூறலாம்.
















