பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர், படுக்கையில் இருந்தபடியே ஒரு ஸ்மார்ட் பண்ணையை ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கி லாபகரமாக நடத்தி வருகிறார். தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக இருக்கும் அந்த நபர் யார்? எந்த நாட்டில் இருக்கிறார்? எப்படி ஸ்மார்ட் பண்ணையை நிர்வகிக்கிறார் ? என்பது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரைச் சேர்ந்தவர் தான் 36 வயதான Li Xia லீ சியா. இவருக்கு ஐந்து வயதில் 5 வயதில் தசைநார் சிதைவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. நோயின் காரணமாக, தொடர்ந்து பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பை இழந்தார் லி சியா. பள்ளிப் படிப்பை நிறுத்தினாலும், கற்பதை மட்டும் லி நிறுத்தவில்லை.
இயல்பாகவே இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் பாடத்தின் மீது லீக்கு ஆர்வம் இருந்ததால் தானாகவே கற்கத் தொடங்கினார். அவரது தங்கையின் பாடப்புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு பாடத்தையும் ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினார். ஆர்வத்தின் காரணமாக அந்தப் பாடங்களை மீண்டும் மீண்டும் படித்துத் தேர்ந்தார்.
ஒவ்வொரு புதிய கல்வியாண்டிலும் அடுத்த வகுப்பான புதிய கணினிப் பாடப் புத்தகம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்து, புதிய பாட நூல் வந்ததும் விருப்பத்துடன் கற்றுத் தேர்ந்தார். தனது 25 வயதில் ஆன் லைன் மூலம் கம்ப்யூட்டர் கோடிங் எழுதுவதைக் கற்றுக் கொண்டார் லீ. நாளாக நாளாக லீயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. படிப்படியாக லீ நடக்க முடியாமல் சிரமப் பட்டார்.
சாப்பிட முடியாமல் தவித்தார். சுவாசிக்கும் திறனையும் இழந்தார். மொத்தத்தில் ஒரே ஒரு கை விரல் மற்றும் ஒரே ஒரு கால் விரல்களில் மட்டுமே அசைவு இருந்தது. 2020-ல்,கோமா நிலைக்குச் சென்ற லீ-க்கு சுவாசக் குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. லீ உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று டாக்டர்கள் தெரிவித்ததும் லீ யின் குடும்பத்தினர் பதறிப் போனார்கள்.
ஆனால் லீ மனம் தளரவில்லை. 2021-ஆம் ஆண்டில், ஒரு நவீன விவசாயப் புரட்சியாக மண்ணில்லா ஸ்மார்ட் விவசாயத்தை லீ கண்டுபிடித்தார். தனது கம்ப்யூட்டர் கோடிங் அறிவு மற்றும் Internet of Things என்ற இணைய தொழில்நுட்பத்தையும் இணைத்து, ஒரு ஸ்மார்ட் விவசாயக் கட்டுப்பாட்டு அமைப்பை லீ உருவாக்கினார். சுவாசக் கருவியுடன் இருக்கும் நிலையிலேயே லீ virtual keyboard-யைப் பயன்படுத்தி, வன்பொருள் மற்றும் சென்சார்களுக்கான விரிவான ஸ்மார்ட் கட்டுப்பாட்டு அமைப்பையும் வடிவமைத்தார்.
முன்னதாக, 2017ஆம் ஆண்டு, தனது கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கிய லீயின் அம்மா(Wu Dimei) வூ டிமெய், லீயைப் பராமரித்து வந்தார். மகனின் வழிகாட்டுதலுடன் தொழில்நுட்பத் திறன்களைப் புதிதாகக் கற்றுக்கொண்ட லீயின் அம்மா, கட்டுப்பாட்டுப் பலகைகளை சாலிடரிங் செய்வது மற்றும் நெட்வொர்க் வயரிங் செய்வது முதல் சுற்றுகளை ஒன்றிணைப்பது மற்றும் பண்ணை கருவிகளைப் பராமரிப்பது வரை அனைத்தையும் நேர்த்தியாகச் செய்யத் தொடங்கினார். லீயின் ஸ்மார்ட் பண்ணையில் செர்ரி தக்காளி, கீரை மற்றும் மூலிகைகள் உள்ளிட்டவை விளைவிக்கப் படுகின்றன.
லீயின் அம்மா, பண்ணை விநியோகங்களுக்குப் பயன்படுத்தப்படும் ரிமோட் மூலம் இயங்கும் ஓட்டுநர் இல்லாத வாகனத்தை உருவாக்கியுள்ளார். லீயின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத் தக்க திருப்புமுனையான அமைந்த இந்த ஸ்மார்ட் பண்ணை லாபகரமாகச் செயல்பட்டு வருகிறது.
பொறுமை, கற்கும் ஆர்வம் , விடாமுயற்சி, மற்றும் தாயின் ஆதரவு இருந்தால் போதும், மிகவும் கடினமான சவால்களையும் வெல்ல முடியும் என்பதற்கு லீ யே சாட்சி. வென்டிலேட்டரை நம்பியிருக்கும் நிலையிலும் லீ காட்டிய உறுதி, அவரை வெற்றி பெற வைத்துள்ளது. இப்போது சீனாவில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு லீ ஒரு ரோல் மாடலாக உள்ளார்.
















