அணுஆயுதக் கட்டுப்பாடு சர்வதேச அளவில் கடுமையாகப் பலவீனமடைந்துள்ள நிலையில் ஒரு ஆபத்தான புதிய அணு ஆயுதப் போட்டி உருவாகி வருகிறது. ஆயுதங்களை விட வேகமாகவும், சுறுசுறுப்பாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும் AI-யால் நடக்கும் அணு ஆயுதப் போர் குறித்து சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1983ம் ஆண்டு சோவியத் யூனியனின் லெப்டினன்ட் கர்னலான ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவ், ஒரு பதுங்கு குழியில் அமர்ந்திருந்தார். ஒரு சிவப்புத் திரையில் “மிஷைல் லாஞ்ச்” ஒளிரும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அது சோவியத் யூனியன் மீது அமெரிக்கா ஐந்து அணு ஆயுதங்களை ஏவியதாகத் தெரிவித்தது.
இது போன்ற தகவலை உடனடியாக மேலதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று நெறிமுறை இருந்த போதும், பெட்ரோவ் அதைச் செய்யவில்லை. ஒருவேளை தகவல் கொடுத்திருந்தால், நிச்சயமாக அமெரிக்கா மீது சோவியத் யூனியன் தீவிரப் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தியிருக்கும்.
அமெரிக்க ராணுவத்தின் முதல் தன்னாட்சி ஆயுதக் கொள்கையை எழுதிய பென்டகன் குழுவை வழிநடத்திய முன்னாள் இராணுவ ரேஞ்சர் பால் ஷார்ரே, இந்தச் சம்பவம் குறித்து, பெட்ரோவின் இடத்தில் ஒரு AI ASSISTANT இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? என்று ஒரு திகிலூட்டும் கேள்வியைக் கேட்டுள்ளார். ஒரு AI அமைப்பு, ஆபத்தைத் தராத புத்திசாலித்தனமாக முடிவெடுத்திருக்குமா? அல்லது அதி தீவிரமான எதிர் தாக்குதலைத் தொடங்கியிருக்குமா? என்பது தான் கேள்வி ? சமீபத்தில், செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் புரேவெஸ்ட்னிக் ஏவுகணையையும், பொசைடன் அணுஆயுத நீர்மூழ்கி ட்ரோனையும் ரஷ்யா வெற்றிக்கரமாகச் சோதனை செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனையை மீண்டும் நடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, புதிய அணு ஆயுத போட்டி AI தொழில்நுட்பங்களுடன் தொடங்கியுள்ளது.
உலகிலேயே அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன்,பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இஸ்ரேல், மற்றும் வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும் அவை வெளிப்படையாக உறுதிப்படுத்தப் படவில்லை. Sipri சிப்ரியின் அறிக்கையின் படி, உலகில் மொத்தம் 13000 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் இந்த ஆண்டுவரை ரஷ்யாவிடம் சுமார் 6000 அணு ஆயுதங்களும் அமெரிக்காவிடம் 5400அணு ஆயுதங்களும், சீனாவிடம் சுமார் 600 அணு ஆயுதங்களும் உள்ளன.
இந்தச் சூழலில், AI யால் இயங்கும் அணு ஆயுதங்களை உருவாக்கும் அதே வேளையில், AI-யால் கண்டறிதல், கண்காணிப்பு மற்றும் இடைமறிப்பு ஆகிய கருவிகளை ரஷ்யா. அமெரிக்க மற்றும் சீனா ஆகிய நாடுகள் உருவாக்கி வருகின்றன. பாதுகாப்பு, அங்கீகாரம் மற்றும் முடிவெடுக்கும் திறனுடன் கூடிய AI ஒருங்கிணைப்பை அமெரிக்கா தனது அணுசக்தி துறையில் கொண்டுவந்துள்ளது. சீனாவும் அணுசக்தி ஆயுதங்களை நிர்வகிக்கவும் கட்டளை, கட்டுப்பாடு, விநியோகம் மற்றும் முடிவு செய்யவும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
பாதுகாப்புத் துறையில் சைபர் மற்றும் மின்னணு போரில் குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கும் AI இப்போது அணு ஆயுதப்போரிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. கட்டளை, கட்டுப்பாடு, கண்காணிப்பு தகவல் தொடர்பு, உளவு பார்த்தல் என அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்துத் தரவுகளை நிகழ் நேர பகுப்பாய்வுக்கு உட்படுத்தி நொடியில் முடிவெடுக்கவும், கணிக்க முடியாத போர்களச் சூழல்களை எளிதில் சமாளிக்கவும் AI உதவுகிறது.
மேலும், அணுசக்தியில் AI திறன்களை ஏற்றுக்கொள்வது என்பது போர்களத்தையே மாற்றியமைத்து விடுகிறது. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையையும் AI தலைகீழாக மாற்றும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எந்த இலக்கை முதலில் தாக்குவது? எப்படியான தாக்குதலை நடத்துவது? எதிரியின் தாக்குதலை எப்படி திசை திருப்புவது ? எப்படி தொடர் தாக்குதலை முன்னெடுப்பது ? இப்படி பரிந்துரைகளை வழங்குவது மட்டுமில்லாமல், AI தானாகவே யார் அனுமதியும் இல்லாமல் முடிவெடுத்து தாக்குதலை நடத்தவும் திறன் பெற்றுள்ளதாக விளங்குகிறது.
காற்றில், கடலில், கடலுக்கு அடியில், நிலத்தில், நெட்வொர்க்கில், ஒத்துழைப்புடன் இணைந்து போர்க்களத்தில் போக்கையே மாற்றியமைக்கும் ஏராளமான AI ட்ரோன்கள் ஒரே நேரத்தில் பல திசைகளிலிருந்து பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தும். ஒவ்வொரு பக்கத்திலும் 100 வீரர்களும் 50 பந்துகளும் கொண்ட ஒரு கால்பந்து விளையாட்டை போல போர்க்களம் சமாளிக்க முடியாததாக இருக்கும். இதில் ஆணு ஆயுதங்களும் AI-யின் கையில் கட்டுப்பாட்டில் வந்தால் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் அங்கீகாரத்தில் AI-ஐ நேரடியாக இணைந்திருப்பது குறித்து எந்த அணுசக்தி நாடும் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கான முழு முயற்சியில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய அணுசக்தி நாடுகள் மறைமுகமாக முயற்சி செய்து வருகின்றன. அணுசக்தி ஏவுதல் குறித்த முடிவை AI-யால் எடுக்க முடியாது என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிபர்கள் இன்னமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் ராணுவத்தை AI முழுமையாக ஒருங்கிணைக்கும்போது, மனிதர்களால் பதிலளிக்க முடியாத அளவுக்கு போர் நடவடிக்கைகளின் வேகம் அதிவேகமாக இருக்கும்.
AI-யால் இயங்கும் அணு ஆயுதங்கள் போரில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கின்றன. அறிவியல் முன்னேற்றம் புவிசார் அரசியலில் புதிய மாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றன. AI தானாகவே அணு ஆயுதப் போட்டியை ஏற்படுத்தாது என்று கூறினாலும், AI அறிவாற்றல் எப்போதும் போரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவாது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள் மனிதர்களால் இனி அணு ஆயுத போரை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில், மனிதனுக்கு அப்பாற்பட்ட வேகத்தில் நடக்கும் ஒரு அணு ஆயுத போரை போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பதற்கான பதில்கள் யாரிடமும் இல்லை. AI-யால் இயக்கப் படும் போர் என்பது பங்குச் சந்தையில் ஏற்படும் திடீர் சரிவைப் போல விரைவாகவும் விவரிக்க முடியாத வகையிலும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்று கூறப்படுகிறது.
















