பாகிஸ்தான் முழுவதும் ஏறக்குறைய 5,000 ஆண்டுகள் பழமையான பழங்கால இந்து மற்றும் பௌத்த பாரம்பரியத் தலங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் நாசவேலைகளால் கடும் சேதமடைந்து வருகின்றன. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் வேண்டுமென்றே குறிவைத்து அழித்துவருவது பற்றித் தொல்லியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் முழுவதும் பல நூற்றாண்டுகள் பாரம்பரியமான இந்து மற்றும் பௌத்த பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிக்கும் பழங்காலக் கோயில்கள், கல்வெட்டுகள் மற்றும் பாறைச் சிற்பங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்கிட் பால்டிஸ்தான், சிலாஸ், ஹன்சா, ஷாட்டியால், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானின் பல பகுதிகளில் இந்தக் கலாச்சாரச் சின்னங்கள் அமைந்துள்ளன.
சிலாஸ் ஹன்சா ஷாட்டியால் பகுதியில் மட்டும் 25,000-க்கும் மேற்பட்ட பாறைச் செதுக்கல்களும் கல்வெட்டுகளும் உள்ளன என்றும், அவற்றின் காலம் கிமு 5000 முதல் கிபி 16 ஆம் நூற்றாண்டு வரை என்றும் வரலாற்று அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்தத் தலங்களில் பல வேண்டுமென்றே சிதைக்கப்பட்டுள்ளன என்று அண்மைக்கால உளவுத் துறை மற்றும் வரலாற்றுத் துறை மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
பாறைகளில் மேற் பரப்புகளில் செதுக்கப்பட்டுள்ள இந்து மற்றும் பௌத்த சின்னங்கள் கீறப்பட்டுள்ளன என்றும், அந்தப் பாறைகள் மேல் அழியாத வண்ணப் பூச்சுகள் பூசப் பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பல இடங்களில், பழங்காலச் செதுக்கல்களின் மீது நேரடியாகவே அதிகாரப்பூர்வ அடையாளங்களும் அறிவிப்புகளும் வரையப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது ஈடுசெய்ய முடியாத இந்து மற்றும் பௌத்த பாரம்பரியத்துக்கு ஏற்பட்டுள்ள மீட்க முடியாத சேதம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சிலாஸ் போன்ற பகுதிகளில் இந்தப் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாப்பதிலும் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது அந்தப் பகுதிகள் எல்லாம் பயங்கரவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதன் காரணமாகவே அந்தப் பாரம்பரிய தொல்பொருள் மற்றும் மதத் தலங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் அதிகரித்துள்ளது. நாசவேலைகளுடன், பல வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களும் நினைவுச்சின்னங்களும் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அவற்றை மீட்கவோ அல்லது பாதுகாக்கவோ குறிப்பிடத் தக்க முயற்சிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் நினைவுச்சின்னங்களின் வேகமான சிதைவுக்குப் பாதுகாப்புச் சட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள பலவீனமே காரணம் என்றும் கூறப் படுகிறது. மேலும், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினரின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட யுனெஸ்கோ விதிகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களின்படி பாகிஸ்தான் தனது கடமைகளை முறையாக நிறைவேற்றத் தவறிவிட்டது.
கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேசக் கடமைகளைப் பாகிஸ்தான் மீறுகிறது என்று கூறியுள்ள வல்லுநர்கள், உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்காவிட்டால், பல பாரம்பரியம் மிக்க தலங்கள் நிரந்தரமாகஅழிக்கப்படும் என்றும், பழங்கால நம்பிக்கைகள், வர்த்தகப் பாதைகள் மற்றும் கலை மரபுகளுடனான உறுதியான தொடர்புகளை மொத்தமாக அழித்துவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
மேலும் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு, இந்தப் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாப்பதற்காக வலிமையான சட்டப் பாதுகாப்பு, கள அளவிலான பாதுகாப்பு மற்றும் சர்வதேச கண்காணிப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சர்வதேச அளவில் எழுந்துள்ளன. கலாச்சார நினைவுச்சின்னங்களை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்கும், நவீன எல்லைகளைத் தாண்டிய வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
















