ஹவுதி போராளிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய ஆயுதச் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து சவுதி அரேபியா வான்வழி தாக்குதல்கள் நடத்தியுள்ளது. ஏமனில் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் ஏன் மோதிக் கொள்கின்றன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்துவருகிறது. நாட்டின் வடக்குப் பகுதிகள் ஹவுதி போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேசமயம் நாட்டின் தெற்கு பகுதி, பெரும்பாலான உலகநாடுகள் அங்கீகரித்த அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அரசுக்கு ஆதரவாகச் சவுதி அரேபியாவின் கூட்டு இராணுவப் படைகள் ஏமனில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
தெற்குப் பகுதியையும் கைப்பற்ற ஹவுதி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஈரான் ஆதரவு பெற்ற இந்த ஹவுதி போராட்டக்காரக்ளுக்கு ஐக்கிய அரபு அமீரகமும் ஆயுத மற்றும் நிதியுதவி செய்து வருகிறது.
இந்நிலையில், ஏமனில் உள்ள முக்கல்லா துறைமுகத்திற்கு ஹவுதி போராளிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிவந்த வந்த கப்பல்கள் மீது சவூதி அரேபியா கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவிலிருந்து வந்திருந்த ஆயுதங்கள் உடனடி அச்சுறுத்தலாகவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தாக இருந்ததால் அந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகச் சவூதி இராணுவ அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் துர்கி அல்-மால்கி தெரிவித்துள்ளார்.
ஏமன் அரசுக்கு எதிராகப் பயங்கரவாதத்தைத் தூண்டும் போராளிப் படைகளை ஐக்கிய அரபு அமீரகம் வழிநடத்துவதாகவும் நாட்டில் ராணுவப் புரட்சி செய்ய முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ள சவூதி அரேபியா அங்கீகரித்துள்ள ஏமனின் அதிபர் ரஷாத் அல் ஒலிமி, சவூதி அரேபியாவின் இராணுவ நடவடிக்கை அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தனது தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் ஒரு சிவப்பு கோடு உண்டு என்பதை சவூதி அரேபியா வலியுறுத்தி உள்ளது. மேலும், அரசுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவும், முறியடிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அரசு தயங்காது என்றும் சவூதி அரேபியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஆனால், அந்தச் சரக்குக் கப்பல்களில் ஏமன் பயங்கரவாத குழுவுக்கான எந்த ஆயுதங்களும் இல்லை என்று கூறியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், இந்த சரக்குக் கப்பல்கள் ஏமனுக்கு அனுப்பப்படுவது குறித்து சவூதி அரேபியாவுக்கு முன்பே தெரியும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஏமனில் உள்ள மீதமுள்ள படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனாலும் எப்போது திரும்பப் பெறப்படும் என்ற தகவலைத் தெரிவிக்கவில்லை. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் ஆதரிக்கும் தெற்கு ஆயுதப் படைகள் ஹட்ராமவுட்டில் உள்ள ஏமனின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோமசிலா உட்பட மாகாணத்தின் முக்கிய எண்ணெய் வளங்களையும் அரசு நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தன.
தொடர்ந்து , ஆளும் அதிபர் மன்றத்தின் தலைமையிடமாகச் செயல்படும் அதிபர் மாளிகையையும் தெற்கு ஆயுதப் படை கைப்பற்றியது. இதன் விளைவாகவே, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் இருநாடுகளுக்கும் இடையேயான மறைமுகமான மோதல் நேரடி மோதலாக மாறியுள்ளன. மேற்கு ஆசியாவில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வந்தாலும், பொருளாதாரம் மற்றும் அரசியல் விஷயங்களில் ஒன்றுக்கொன்று போட்டியிடத் தொடங்கியுள்ளன. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று கூறுவது போல, சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மோதிக் கொள்ளும் நிலையில், அது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கே லாபமாக அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
















