உலகளவில் ஏஐ வீடியோக்களை கொண்டு மட்டும் நடத்தப்படும் யூடியூப் சேனல்களில் இந்தியாவை சேர்ந்த யூடியூப் சேனல் முதலிடம் பிடித்துள்ளது. அது எந்தச் சேனல்? அதன் வருவாய் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக யூடியூப் உள்ளது. அத்துடன், லட்சக்கணக்கான மக்களின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும் யூடியூப் விளங்குகிறது. யூடியூப்பில் பல்வேறு வகையான சேனல்கள் இருந்தாலும், Entertainment, tech, gaming, review, food உள்ளிட்டவை சார்ந்த சேனல்கள்தான் அதிக SUBSCRIBERS கொண்டவையாக உள்ளன. உலகம் முழுவதும் உள்ள இத்தகைய யூடியூப் சேனல்களின் செயல்பாடு குறித்து அண்மையில், Kapwing என்ற வீடியோ எடிட்டிங் தளம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
சுமார் 15,000 யூடியூப் சேனல்கள் இந்த ஆய்வுக்காகக் கண்காணிக்கப்பட்டன. இந்த ஆய்வின் மூலம், யூடியூப் வீடியோ உருவாக்கத்தில் ஏஐ-யின் பங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, உலகம் முழுவதும் 278 சேனல்கள் முழுக்க முழுக்க ஏஐ வீடியோக்களை மட்டுமே பதிவேற்றி அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. இந்த அனைத்து சேனல்களும் இணைந்து சுமார் 63 பில்லியனுக்கும் அதிகமான வியூஸ்-களை பெற்றுள்ளன.
அத்துடன், 22 கோடிக்கும் அதிகமான SUBSCRIBER-களையும் அவை கொண்டுள்ளன. இந்த 278 சேனல்களில் இந்தியாவை சேர்ந்த சேனல்தான் முதலிடத்தில் உள்ளது என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த யூடியூப் சேனலின் பெயர், Bandar Apna Dost. Boltu Bandar என்ற குரங்கை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு, இந்தச் சேனல் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அவை அனைத்துமே ஏஐ-யால் உருவாக்கப்பட்டவை.
நீண்ட நேர வீடியோக்களுக்குப் பதிலாக, shorts எனப்படும் குறுகிய கால வீடியோக்களை Bandar Apna Dost சேனல் உருவாக்கி வருகிறது. நகைச்சுவை, சோகம், கோபம் என அனைத்து உணர்வு சார்ந்த வீடியோக்களையும் வெளியிடும் இந்தச் சேனல், 28 லட்சம் SUBSCRIBER-களை கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டிருந்தபோதிலும், இந்தச் சேனல் 250 கோடி வியூஸ்களை கடந்துள்ளது.
இந்தச் சேனலின் ஆண்டு வருமானம் மட்டும் 38 கோடி ரூபாய் என Kapwing தளம் தெரிவித்துள்ளது. Bandar Apna Dost சேனலின் இந்த சாதனை குறித்து அறிந்த நெட்டிசன்கள், அந்தச் சேனலுக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்தியர்களாகிய நாங்கள் தொழில்நுட்பம் சார்ந்த எந்த வாய்ப்பையும் தவறிவிடாதவர்கள் எனவும் அவர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
















