கோத்ரேஜ் பீரோவில் சொத்து பத்திரத்தை வை என்று சொல்லக் கேட்டிருப்போம்.
அந்த கோத்ரேஜ் பீரோவை தயாரித்தவர்கள் தான், தங்கள் சொத்துக்களைப் பிரிக்க ஓப்பந்தம் போட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது? சொத்துக்களைப் பிரிக்கும் முடிவின் பின்னணி என்ன ? என்பதை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…
வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி தொடங்கி இருந்து ரியல் எஸ்டேட் வரை விரிந்து பரவியுள்ள கோத்ரெஜ் குடும்பம், தனது 127 ஆண்டு பழமையான கூட்டு நிறுவனத்தை இணக்கமாக, தங்களுக்குள் பிரித்துக் கொள்ள கோத்ரெஜ் குடும்பம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியப் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட godrej industry, godrej consumer, godrej agrovet, godrej properties, மற்றும் astec life sciences, என்ற ஐந்து நிறுவனங்களை ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் கோத்ரெஜ் வைத்திருந்தார்கள்.
அவர்களின் உறவினர்களான ஜம்சைத் கோத்ரெஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரெஜ் ஆகியோர் பட்டியலிடப்படாத கோத்ரெஜ் & பாய்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மும்பையில் உள்ள பிரதான சொத்துகளை வைத்திருந்தார்கள்.
பாரம்பரிய சொத்து பிரிவு ஒப்பந்த அறிக்கையின்படி, ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் ஒருபுறமும், அவர்களது உறவினர்களான ஜம்சைத் கோத்ரெஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரெஜ் மறுபுறமும் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆதி கோத்ரெஜ் குழுமம் ஒன்றாகவும், ஜம்சைத் கோத்ரெஜ் குழுமம் மற்றொரு பிரிவாகவும் செயல்படும்.
கோத்ரெஜ் குடும்பம் கோத்ரெஜ் நிறுவனங்களின் பங்குகளை “உரிமை மறுசீரமைப்பு” என்று பிரித்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் மாறுபட்ட சிந்தனைகளுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், நிறுவன பங்குகளின் உரிமையைப் பாதுகாக்கவும் மரியாதை மற்றும் கவனத்துடன் இந்த சொத்து மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்ரெஜ் நிறுவனங்களின் பிற அனைத்து பங்குதாரர்களுக்கான நீண்டகால மதிப்பை இது உருவாக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
“Godrej Enterprises Group (GEG) மற்றும் கோத்ரேஜ் & பாய்ஸ் (G&B) அதன் துணை நிறுவனங்கள் அனைத்தையும் இந்த குழுவின் இப்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜம்சைத் கோத்ரெஜ், மற்றும் ஸ்மிதா கோத்ரெஜ்ஜின் மகள் நைரிகா ஹோல்கர் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்பத்தினர்கள் கட்டுப்படுத்துவார்கள்.
Godrej Industries Group (GIG) கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் – இதில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களான godrej industry, godrej consumer, godrej agrovet, godrej properties, மற்றும் astec life sciences ஆகியவை அடங்கும் – இதன் தலைவராக நாதிர் கோத்ரெஜ் இருப்பார்,
ஆதி கோத்ரெஜ்ஜின் மகன் Pirojsha Godrej (பிரோஜ்ஷா கோத்ரேஜ்), (GIG) ஜிஐஜியின் நிர்வாக துணைத் தலைவராக இருப்பார். மேலும் நாதிர் கோத்ரெஜ்ஜிக்கு பிறகு வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த குழுமத்தின் தலைவராக பதவி ஏற்பார்.
மேலும் (GIG) ஜிஐஜி குழுமம் ஆதி கோத்ரெஜ் , நாதிர் கோத்ரெஜ் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்பத்தினர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜம்சைத் கோத்ரெஜ் குறிப்பிடுகையில், 1897ம் ஆண்டு முதல் எப்போதும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வலுவான நோக்கத்தில் செயல்படும் கோத்ரேஜ் & பாய்ஸ் இனி நாட்டின் உயர் தொழில்நுட்ப பொறியியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தை கட்டியெழுப்ப 1897ல் கோத்ரேஜ் நிறுவப்பட்டது. 125 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் யார் என்பதைத் தொடர்ந்து நிலைநிறுத்த கவனத்துடன் மற்றும் சுறுசுறுப்புடனும் இந்த பாரம்பரியத்தை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம் ” என்று நாதிர் கோத்ரெஜ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த சொத்து மறுசீரமைப்புக்கு உதவும் வகையில், மாற்று நிறுவனங்களில் இருந்தவர்கள் தாமாகவே தங்களை அந்தந்த நிறுவனங்களில் இருந்து விடுவித்துக்கொண்டனர்.
கோத்ரெஜ் அறிக்கையின்படி, உரிய ஒழுங்குமுறை ஒப்புதல்கள் கிடைத்த பின் இந்த உரிமை மறுசீரமைப்பு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.