கடந்த சில மாதங்களாக தக்காளியின் வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்தது. இதனால் சில்லறை வியாபாரிகள் மற்றும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் தக்காளி விலை சில நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகபட்சமாக ரூ.150 வரை சென்றது. வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரை விற்கப்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களாக ஓரளவு விலை குறைந்து வந்தது. அதன்படி, கடந்த 24-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர், மீண்டும் விலை உயர தொடங்கியது. கடந்த 25-ந்தேதி கிலோவுக்கு ரூ- 10ம், 26ந்தேதி கிலோவுக்கு ரூ.20-ஆகவும் உயர்ந்து இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரகம் தக்காளி கிலோ ரூ.150க்கும், இரண்டாம் ரகம் ரூ.140க்கும், 3ம் ரகம் ரூ.130க்கும் விற்பனை செய்யப்படுகிறது.