இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மழைக்கு 200 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 31 பேரை காணவில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், மேகவெடிப்பு காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் முன்னெப்போதும் இல்லாத வகையில், பியாஸ்நதி கரைபுரண்டு ஓடுகிறது. பியாஸ்நதி வெள்ளத்தில் 30,000 வீடுகள் மூழ்கின. ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், 300 சாலைகள் மூடப்பட்டிருப்பதோடு, 274 மின்சாரம் மற்றும் 42 நீர் வழங்கல் திட்டங்கள் தடைபட்டிருக்கின்றன. குறிப்பாக, சோலன் மாவட்டத்தில் கல்கா – சிம்லா 4 வழி தேசிய நெடுஞ்சாலை 5 நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால், சிம்லாவில் சுற்றுலாத்துறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது.
இந்தப் பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதால், 79 இடங்களில் நிலச்சரிவும், 53 இடங்களில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் 774 வீடுகள் முழுமையாக இடிந்து விட்டன. 7317 வீடுகள் பாதியளவுக்குச் சேதமடைந்திருக்கின்றன. மேலும், 254 கடைகளும், 2337 மாட்டுக் கொட்டகைகளும் சேதமடைந்திருக்கின்றன. இதன் மூலம் மாநில அரசின் உட்கட்டமைப்புக்கு ஏற்பட்ட இழப்பு 6,563.58 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
மேலும், பருவமழை தொடங்கியதில் இருந்து, கடந்த 41 நாட்களில் மட்டும் 200 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 31 பேர் மாயமாகி இருப்பதாகவும் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவர்களில் 57 பேர் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாகவும், 143 பேர் மழைக்கால விபத்துகளாலும் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதனிடையே, மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.