பாகிஸ்தான் மட்டுமல்ல, அனைத்து அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். ஆனால், அது அந்தந்த நாடுகள் நடந்துகொள்வதைப் பொறுத்தே இருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாடு கடந்த 1-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், “இந்தியாவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண விரும்புகிறோம். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் நமது தீவிரமான பிரச்னைகள் புரிந்துக் கொள்ளப்படாவிட்டால், அண்டை நாடுகளுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அண்டை நாடுகளும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் 3 போர்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறையைத்தான் சந்தித்தோம். ஆகவே, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்க மாட்டோம்” என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, இந்தியாவுடன் போரை விரும்பவில்லை. எல்லா பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கூறியது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “பாகிஸ்தான் மட்டுமல்ல, அனைத்து அண்டை நாடுகளுடனும் இயல்பான உறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கானச் சூழலை அந்தந்த நாடுகள்தான் உருவாக்க வேண்டும். அதாவது, பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். அதுவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது” என்று தெரிவித்தார்.