கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் போது சூறாவளிக் காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில், அய்யம்பாளையம், வெள்ளியங்காடு, கோரக்காட்டூர், கடுக்காம் பாளையம், குள்ளம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் செவ்வாழை, மொந்தன், நேந்திரன், கதளி, ரஸ்தாளி உள்ளிட்ட வாழைகளைப் பல லட்ச ரூபாய் செலவு செய்து விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகக் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில், நேற்றிரவு கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெள்ளாங்கோவில், அய்யம்பாளையம், வெள்ளியங்காடு, குள்ளம் பாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பெய்த மழையின் போது வீசிய சூறாவளிக் காற்றால் பல ஏக்கரிலிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது.
அறுவடைக்குச் சில நாட்களே இருந்த நிலையில் பல லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. அதே நேரத்தில் முறிந்து விழுந்துள்ள வாழை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.
மேலும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாழைத்தார்கள் சேதமானதால் அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.