திண்டுக்கல் ரயில் நிலையத்துக்குத் தூய்மை, சுகாதாரமான உணவு வினியோகம் ஆகியவற்றுக்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், ஐஎஸ்ஓ தரச்சான்று நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர் இரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
தமிழகத்திலுள்ள முக்கிய இரயில் நிலையங்களில் திண்டுக்கல் ரயில் நிலையமும் ஒன்று. இந்த இரயில் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட இரயில்கள் நின்று செல்கின்றன. இந்த இரயில்கள் நின்று செல்வதற்கு வசதியாக 5 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் இரயில் நிலையத்துக்குத் தூய்மை, சுகாதாரமான உணவு வினியோகம் ஆகியவற்றுக்காக ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறுவதற்குப் விண்ணப்பிக்கப்பட்டது. இதையொட்டி ஐ.எஸ்.ஓ. தரச்சான்று நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர் திண்டுக்கல் இரயில் நிலையம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விரைவில் திண்டுக்கல் இரயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்து விடும் என்று இரயில்வே துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இரயில் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரி கூறியதாவது, “முறையான நேரத்தில் ரயில்களை இயக்குதல், சிக்னல்களைச் சிறப்பாக செயல்படுத்துதல், ரயில் நிலைய தொலைத் தொடர்புகளைச் சரியாக பராமரித்தல், பயணச் சீட்டு முன்பதிவு மற்றும் அதிக சரக்குகளைக் கையாளுவதில் கவனம், சுற்றுச்சூழல் பேணுதல், பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதி, சுகாதாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.