செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார் என்று கூறி, உயர் நீதிமன்றமும் கைவிரித்து விட்டது. இதனால், செந்தில் பாலாஜி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது.
இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு ஜாமீன் பெறுவதற்காக, அவரது வழக்கறிஞர்கள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், செல்லும் இடங்களில் எல்லாம் பாதகமான பதிலே கிடைத்து வருவதால், செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் இருக்கின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முதலில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், மேற்கண்ட வழக்கு சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு என்பதால், அந்த மனுவை விசாரிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.
இதையடுத்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடினர். ஆனால், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, சிறப்பு நீதிமன்றத்தையே நாடுமாறு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை நாடினர். அதற்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதியோ, அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆகவே, உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டு வாருங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் , சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று முறையீடு செய்யப் பட்டது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கெனவே விலகிவிட்ட நிலையில், இந்த முறையீட்டை எப்படி ஏற்றுக்கொள்வது? என்று நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பியதோடு, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவைப் பொறுத்தவரை, யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். எனவே, வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்து விட்டார். இதனால், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் செய்வதறியாது திகைத்துப் போயினர் .
இது ஒருபுறம் இருக்க, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அமர்ந்து வழக்குகளை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.