சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், திமுகவினரின் தவறுகளை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில், மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அப்போது, கூட்டத்தில், வீட்டு உயோக சிலிண்டர் விலையை ரூ.200 ஆக குறைத்து உத்தரவிட்ட பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது, சந்திரயான் 3 வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கும், பாரத பிரதமர் மோடிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 2-ம் கட்ட யாத்திரை வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். பாரத பிரதமராக மோடிஜி மீண்டும் வர வேண்டும். மக்கள் மோடிஜியை விரும்புகிறார்கள். நாமும் மோடிஜியை விரும்புகிறோம். நமது எண்ணங்களும், மக்களின் எண்ணங்களும் ஒரே மாதிரியாக உள்ளது.
எனவே, தமிழகத்தில் நாம் 25 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் இரவு – பகல் பாராமல் பாடுபடவேண்டும் என்றும்,
இனிமேல் திமுக தலைமை, அமைச்சர்கள் போன்றவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உள்ளூரில் இருக்கும் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் செய்த தவறுகளை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அனுப்புங்கள். அது தொடர்பான புகாரை ஆதாரத்துடன் மீடியாவுக்கு கொடுங்கள் என அறிவுரை வழங்கி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.