புழக்கத்தில் இருந்து ₹2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19 அறிவித்திருந்தது.
கிளீன் நோட் பாலிசி அடிப்படையில், மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து கையிலிருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும், வரும் 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரூ 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும், தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் என்றும், வங்கிகளில் செலுத்தப்படும் ரூ2,000 நோட்டுகளை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
திரும்பப் பெறுவதற்கு இன்னும் 30 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், ரிசவர் வங்கி இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “புழக்கத்தில் இருந்த ₹2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மார்ச் 31 அன்று ₹3.62 லட்சம் கோடியாக இருந்தது. 2023 மே 19, 2023 அன்று ₹3.56 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ₹2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ₹3.32 லட்சம் கோடி ஆகும். புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகள் 93 சதவீதம் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அதில் 76 சதவீதம் வைப்புத்தொகையாகவும், 13 சதவீதம் மாற்று மதிப்பு நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும், மாற்றவும் செப்டம்பர் 30, 2023 வரை மீதமுள்ள நாட்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”, என்று கூறப்பட்டுள்ளது.