சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் நடந்த மாதிரி வாக்கெடுப்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70% வாக்குகள் முன்னிலை பெற்றிருக்கிறார்.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடைதால், புதிய அதிபரை தேர்வுச் செய்வதற்கான அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்க கடந்த 11-ம் தேதி அறிவித்தார். இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ம் தேதி நடந்தது. இதில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்தினம், சீன வம்சாவளியைச் சேர்ந்த இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. வாக்குப்பதிவு எப்படி இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக, மாதிரி வாக்கெடுப்பு நடந்தது. அதாவது, பதிவான ஒவ்வொரு வாக்குச் சாவடியில் இருந்தும் 100 வாக்குச்சீட்டுக்கள் எடுக்கப்பட்டு, அவை முதலில் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையின்போது, வேட்பாளர்களும், அவர்களது முகவர்களும் இருந்தனர்.
இந்த மாதிரி வாக்கெடுப்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம், 70% வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங் 16% வாக்குகளும், டான் கின் லியான் 14% வாக்குகளும் மட்டுமே பெற்றனர். பொதுவாக, மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகளும், இறுதி முடிவுகளும் 95% ஒத்திருக்கும் என்பதால், தமிழரான தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெறுவது உறுதியாகி இருக்கிறது.