கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் ஒய்யார நடை போட்டு சென்ற காட்சியை பார்த்த பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரித்துள்ளனர்.
இந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதியிலும், ஆற்றம் கரையோரத்தில் உள்ள பகுதிகளிலும், தேயிலை தோட்டம் உள்ள பகுதிகளிலும் சுற்றி வருகிறது. இதை அங்குள்ள பொதுமக்களும், வால்பாறைக்குச் சுற்றுலா வரும் பயணிகளும் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதற்காக, பலரும் அந்த பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
மேலும், முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தின் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சுமார் 8 காட்டு யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக, அதாவது வரிசையாகவும், ஹாயாகவும் அன்ன நடை போட்டு வெளியே சென்றது.
யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடியது. இதை பொதுமக்களும், சுற்றுலா வரும் பயணிகளும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள், தங்களது செல்போனில் போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டினர்.