தமிழ்த் திரையுலகில் பிரபலமான காமெடி நடிகராக திரை இரசிகர்களின் அன்பைப் பெற்ற காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
1981ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், 1986ல் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் அவருடன் முதன்முறையாக இணைந்து நடித்தார். பிறகு நடிகர் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகராகவே மாறிப் போனார்.
கமல் இருவேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிகர் ஜனகராஜூடன் இவர் கான்ஸ்டபிளாக இணைந்து தன் நடிப்பாலும் “‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ என்ற வசனத்தாலும் திரை இரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் .
நகைச்சுவை மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக தன் நடிப்பை வெளிக்காட்டிய ஆர்.எஸ்.சிவாஜி, சமீபத்தில் கோலமாவு கோகிலா, தாராள பிரபு, சூரரைப் போற்று, மாறா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக சாய் பல்லவியின் அப்பாவாக கார்கி படத்தில் இவரின் நடிப்புப் பலராலும் பாராட்டப் பட்டது.
இவரின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.