48 மணி நேரத்திற்குள் தி.மு.க. நிர்வாகியை வெளியேற்றி வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் கிரிஜா. இவருக்குச் சொந்தமாக தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டில் ராமலிங்கம் என்பவர் நீண்டகாலமாக வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். இவர், தற்போது ஆளும் தி.மு.க. கட்சியின் வட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவரை, வீட்டைக் காலி செய்யும்படி கடந்த 13 வருடங்களுக்கு முன்பிருந்து கூறிவருகிறார். ஆனால், ராமலிங்கம் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார்.
எனவே, வீட்டை காலி செய்து கொடுக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கிரிஜா வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டைக் காலி செய்யுமாறு ராமலிங்கத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், ராமலிங்கம் காலி செய்யவில்லை. எனவே, கிரிஜா உச்ச நீதிமன்றத்தை நாடினார். வீட்டை காலி செய்யுமாறு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டும், ராமலிங்கம் காலி செய்யவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ராமலிங்கம் தாக்கல் செய்ய மனுக்களையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து விட்டன.
இது ஒருபுறம் இருக்க, கிரிஜா நீதிமன்றத்தை நாடியதால் 2017-ம் ஆண்டு முதல் வீட்டு வாடகை தருவதையும் ராமலிங்கம் நிறுத்தி விட்டார். இதையடுத்து, கிரிஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமலிங்கம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரணைக்கு ராமலிங்கம் நேரில் ஆஜராகி, கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வீட்டை காலி செய்து கொடுப்பதோடு, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார்.
ஆனாலும், ஆளும் கட்சிப் பிரமுகர் என்கிற தைரியத்தில், ராமலிங்கம் வீட்டையும் காலி செய்யவில்லை, வாடகை பாக்கியையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் ராமலிங்கத்துக்கு தண்டபாணி நகரில் சொந்த வீடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, கிரிஜா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “ராமலிங்கம் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஆகவே, இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்.காவல் ஆணையர் போதுமான காவல்துறையினரை நியமித்து, 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வீட்டின் உரிமையாளரான கிரிஜாவிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் 4-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவு குறித்து அரசு வழக்கறிஞர் உடனடியாக காவல்ஆணையரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோ அல்லது மின்னணு தகவல் பரிமாற்றம் வாயிலாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.