உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி திருக்கோவிலில், கடந்த ஆகஸ்ட் மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.120 கோடி என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருமலை திருப்பதி திருக்கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அதேபோல, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசித்து வரும் ஏராளமான இந்தியர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இவ்வாறு திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல்களை வெங்கடாலஜபதியிடம் முன்வைக்கின்றனர். அவ்வாறு வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேறிய உடன், தலைமுடி காணிக்கை செலுத்துவது, பக்தர்கள் தங்குவதற்குக் கட்டிடம் கட்டிக் கொடுப்பது மற்றும் தங்கம், வெள்ளி, வைரம் ஆபரணங்களைக் காணிக்கையாகச் செலுத்துவது, பாரம்பரியமாக இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் தரிசனம், தலைமுடி மற்றும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்படும்.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் 22.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில், ரூ.120 கோடி உண்டியலில் காணிக்கையாகக் கிடைத்துள்ளது.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 1 -ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கோவில் உண்டியலில் ரூ.120 கோடியே 5 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும், 9.7 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.