நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு, சுகாதாரத் துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு முன் தேதியிட்டு பணி நிரந்தரம் வழங்கி, பணி மூப்புப் பட்டியலை திருத்தி அமைத்து, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவைக் கண்டுகொள்ளவில்லை. இதனால், 2015 -ம் ஆண்டு, தமிழக அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதி மன்றத்தில் சுகாதாரச் செயலாளர் மற்றும் பொதுத் துறை இயக்குநர் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை நடைமறைபடுத்தப்படும், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்த தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 8 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் வைத்திருந்ததைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், 2007 -ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, நடைமுறைப்படுத்தி அதன் அறிக்கையை 2 வாரத்தல் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.