இந்தியர்களின் மூளைக்கு உலகம் முழுவதும் மவுசு அதிகம் என்பது போல இந்திய மூளைகள் உலகின் பல முக்கிய நிறுவனங்களின் வேர்களாகச் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாதெல்லா குறித்து பார்ப்போம்.
ஐதராபாத்தில் பிறந்த சத்யா நாதெல்லா, மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பி.இ. முடித்தார். பிறகு, மேல் படிப்புக்காக அமெரிக்க சென்றார். விஸ்கான்சின் (Wisconsin) பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், சிகாகோ (Chicago) பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.
படிப்பை முடித்த சத்ய நாதெல்லா 1992-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து இந்த நிறுவனத்தில் பணியாற்றிய சத்ய நாதெல்லா க்ளவுட் அன்ட் என்டர்பிரைஸ் (Cloud and Enterprise) குழுவின் தலைவர், சர்வர் அன்ட் டூல்ஸ் (Server and Tools) தலைவர், பிசினஸ் பிரிவின் துணைத் தலைவர், வணிக பிரிவின் பொது மேலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.
இவர், 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின் 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இவருக்கு 2022-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.