தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையும், பலத்த சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள தென்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.
இதனால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.