அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) உட்படப் பலரும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
அதே கட்சியில், அதிபர் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே உட்படப் பலரும் களமிறங்கியுள்ளனர். அவர்கள் குடியரசுக் கட்சியினரிடம் ஆதரவைத் திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில், பத்திரிகைகள் மற்றும் இணையத்தில் அதிகம் பேசப்படும் நபராக விவேக் ராமசாமி உள்ளார்.
இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு அருகிலுள்ள வடக்கஞ்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கேரளாவில் பொறியியல் படிப்பை முடித்த விவேக்கின் தந்தை, பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அதேபோல, விவேக்கின் தாயாரான கீதாவும் அமெரிக்காவில் முதியோர் மனநல மருத்துவராகப் பணியாற்றினார்.
பெற்றோர் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்திருந்ததால், விவேக் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவின் ஓஹியோ (Ohio) மாகாணத்திலுள்ள சின்சினாட்டி (Cincinnati) பகுதியில்தான்.
இவர் ஹார்வர்டு(Harvard) பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயோலஜி பட்டப்படிப்பைப் படித்தார்.
அமெரிக்காவின் தவிர்க்க முடியாத தொழிலதிபரான விவேக் ராமசாமி, தான் நிர்வகித்த பொறுப்புகளை விடுத்து, அதிபர் தேர்தலுக்காகக் களமிறங்கி, அதற்கான பணிகளைச் செய்து வருகிறார். அமெரிக்காவில் இவருக்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் பலரும் உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களாகவும், பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களாகவும் பொறுப்பேற்று, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்து வருகின்றனர். அந்த வரிசையில், விவேக் அடுத்த இடத்தை பிடிப்பாரா என இந்திய மக்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர்.