மதுரை என்று சொன்னாலே முதலில் ஞாபத்திற்கு வருவது கள்ளழகர் திருக்கோவில்தான்.
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அழகர் திருக்கோவில். இந்த திருக்கோவில், மலை மீது அமைந்துள்ளதால், அழகர் கோவில் என்றும், இந்த மலையைச் சோலை மலை என்றும் பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
இங்கு, சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகியவைகளைத் தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
அதபோல, மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள், இங்கு அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.
பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் என 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற சிறப்பு மிக்க திவ்ய தேசமாகும்.
இத்தலத்தில் காவல் தெய்வமாகக் காட்சி தரும் கருப்பண்ண சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என போற்றப்படுகிறார்.
பதினெட்டாம் படியான் என்றும் பக்தர்களால் அன்போடு அழைப்படும் இவரைக் கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்கத்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பெருமாள் மீது எமதர்மராஜன் மிகுந்த பக்தி கொண்டவர். ஒருமுறை, அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அவருக்கு நேரில் அருட்காட்சி கொடுத்தார்.
அப்போது, அவர், பெருமாளிடம் தினந்தோறும் ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் வேண்டும் என்று கேட்க, அதன்படியே பெருமாளும் வரம் அருளினார். இதனால், இங்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்மராஜனே நடத்துவதாக ஐதீகம்.
இத்தலத்தில் அணையா விளக்கு இரவு – பகல் என எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். நூபுர கங்கை என்னும் சிலம்பாறு வற்றாத ஜீவ நதியாகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழர்களின் சிற்பக் கலைக்குச் சான்றாக விளங்கும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்று, இங்கு பல அழகிய சிற்பங்கள் கண்களுக்கு விருந்து படைக்கிறது.
விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில், விளையும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்.
இவ்வாறு காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி, அதில் திருக்கோவில் சார்பில், தோசை சுட்டுப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவிலில், கும்பாபிஷேக விழா, விரைவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. ரூபாய் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் மகா கும்பாபிஷேகத்திற்கு மதுரை அழகர் கோவில் தயாராகி வருகிறது.
மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேக நாளில், பெருமாளின் பரிபூரண அருளைப் பெற பக்தர்கள் பயபக்தியுடன் காத்துள்ளனர்.