ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை தந்தார். இன்று கோவையிலிருந்து அவர் மீண்டும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்குப் புறப்பட்டார்.
முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜாதிகளில், உயர்வு தாழ்வு என்பதை இந்து மதமோ, சனாதன தர்மமோ வலியுறுத்தவில்லை. சிலர், தவறாக பிரச்சாரம் செய்கின்றனர்.
காலம் காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தைக் குறை சொல்வது என்பது திமுகவிற்கு வாடிக்கையாகி விட்டது. அவர்கள் இன்னும் 1,952 லேயே இருக்கிறார்கள். காலம் மாறி வருகிறது. பாரம்பரியமும், பெருமையும் காக்கப்பட வேண்டும் என தமிழர்கள் விரும்புகின்றார்கள்.
தேவையில்லாதவற்றைத் தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுதான், திமுகவிற்கும் நல்லது தமிழகத்திற்கும் நல்லது.
சனாதனத்தை ஒழிப்பேன் என்பதில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது, திமுக ஒழிய போகின்றது என்பதையே காட்டுகின்றது.
திமுக அரசு தமிழக ஆளுநரிடம் பகை வளர்த்துக் கொண்டிருக்கிறது. காசு எதிர்பார்க்காத நல்ல ஆளுநர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறார். இதைவிட என்ன வேண்டும் இவர்களுக்கு.
தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை கொண்டிருக்கக் கூடிய ஒறஉ ஆளுநர் கிடைத்திருக்கிறார்.
அரசியல் சாசனத்தில் எது சொல்லப்பட்டு இருக்கிறதோ , உச்ச நீதிமன்றத்தில் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எது இருக்கிறதோ அது மட்டும் தான் கவர்னரால் செய்ய முடியும். அரசிய்வாதிகளின் சொல்படி எல்லாம் செய்ய முடியாது.
அடிக்கடி தேர்தல் வந்தால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் வந்தால், தேசத்திற்கு முன்னேற்றம் கிடைக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு இவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என தெரியவில்லை.
இந்தியா கூட்டணி பலமில்லாத கூட்டணி. மக்கள் விரோத கூட்டணி. மக்கள் ஆதரவு இல்லாத கூட்டணி. அந்த கூட்டணியில் உள்ள தலைவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது மோடி, அமித்ஷா ஆகியோருக்கு தெரியும்.
சந்திராயன் விண்கலத்தைத் தொடர்ந்து சூரிய ஆராய்ச்சிக்காக ஆதித்யா விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி மேலும்மேலும் அடைய வேண்டும் என்பது தான் ஒவ்வொரு இந்தியரின் விருப்பம் என்றார்.