தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 57 அடி ஆகும். இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 49.80 அடியாக உள்ளது.
அணையிலிருந்து நீர் வெளியேற்றாமல் இருப்பதாலும், மேலும், மழை நீடிக்கும் என்பதாலும், விரைவில் அணையின் முழு கொள்ளளவான 57 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அணைக்கு வரும் நீரின் அளவு 41 கன அடியாக உள்ளது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அடுத்த மாதம் வழக்கம்போல், முதல்போக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.