சமீபக் காலமாக இந்திய கரோனா (Corona) தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படும் என்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. ஆனால், இந்திய கரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து இல்லை என ஆய்வின் முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ளோஸ் ஒன்’ (Plos One) இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு (Covishield) மற்றும் கோவாக்சின்(covaxin) தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி ஜி.பி.பந்த் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2021 மற்றும் ஆகஸ்ட் 2022 இடைப்பட்ட காலத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1,578 பேரின் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு நடைபெற்றன.
இதில், 1,086 போ் தடுப்பூசி செலுத்தியவர்கள். மீதமுள்ள 492 போ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள். மேலும், 1047 போ் 2 தவணை தடுப்பூசிகளையும், 39 போ் முதல் தவணைத் தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளிடம், அவர்கள் செலுத்திக் கொண்ட தடுப்பூசி வகை, தடுப்பூசி செலுத்திய தேதி மற்றும் அதன் பின்விளைவுகள் உள்ளிட்ட தரவுகள் பெறப்பட்டன. இதனடிப்படையில், நடத்திய ஆய்வின் முடிவில், கரோனா (Corona) தடுப்பூசிகளுக்கும் மாரடைப்புக்கும் எந்த தொடர்புமில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
முதலில் 30 நாட்களும் பின்னர் 6 மாதங்களும் என நடத்தப்பட்ட 2 ஆய்விலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களே குறைவாக உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஜி.பி. பந்த் மருத்துவமனையின் மோஹித் குப்தா கூறுகையில், ‘இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, கரோனா தடுப்பூசிகளுக்கும் மாரடைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, உண்மையில் தடுப்பூசி செலுத்திய பிறகு உயிரிழப்பு அச்சுறுத்தல் வாய்ப்புகள் குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது’ என்று கூறினார்.