2024-25-ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், 2024-25-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது. பட்ஜெட் தயாரிப்பதற்குத் தேவையான விவரங்களை வழங்குமாறு பல்வேறு அமைச்சகங்களையும், துறைகளையும் மத்திய நிதியமைச்சகம் கோரியுள்ளது.
இதுகுறித்து பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் பட்ஜெட் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 2-வது வாரத்தில் பல்வேறு துறைகளுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்கள் செலவினத் துறைச் செயலர் தலைமையில் தொடங்கும். அந்தக் கூட்டங்கள் நவம்பர் வரை நடைபெறும்.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறித்த விவரங்கள் இறுதி செய்யப்படும். அதைக் கருத்தில்கொண்டு, துறைகளின் நிதி ஆலோசகர்கள் அக்டோபர் 5-ந் தேதிக்குள் பட்ஜெட்டுக்குத் தேவையான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றுக்குத் தேவையான நிதி, அதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் வழங்கப்பட வேண்டும். அவை தொடர்பான விவாதம், பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களில் நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்வார் என எதிா்பாா்க்கப்படுகிறது.