ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் மூலம், மனிதர்களைக் குறைந்த புவி சுற்று வட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் திரும்பக் கொண்டுவருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும்.
கடந்த 2018-ஆம் ஆண்டு சுதந்திரத் தின உரையின்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ரூபாய் 10,000 கோடி மதிப்பிலான ககன்யான் திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், சந்திரயான்-3 வெற்றி பயணத்தைத் தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம், மூன்று நாட்களுக்கு மூன்று மனிதர்களைக் கொண்ட குழுவினரைப் பூமியின் மேற்பரப்பிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சுற்று வட்டப் பாதைக்கு அனுப்புவதும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பாகத் திரும்பி வந்து இந்திய கடல் பரப்பில் இறக்குவதும் இதில் அடங்கும்.
இந்த விண்வெளிப் பயணத்தின் முதல் சோதனையானது அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ‘வியோமித்ரா’ (vyommitra) என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வியோமித்ரா (vyommitra) என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். வியோமா என்பது விண்வெளி என்ற பொருளையும், மித்ரா என்பது நண்பர் என்ற பொருளையும் தருகிறது.
ககன்யான் திட்டம் வெற்றி பெற்றால், மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். ஏற்கனவே, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளன.