சனாதனத்தை அழிப்பேன் என கூறிய திமுக அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக அமைச்சர் ஆகியோர் மீது உத்தரப் பிரதேச மாநில காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றைப் போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு ஒருபடி மேலே சென்ற அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா, உதயநிதி தலையைச் சீவினால் 10 கோடி ரூபாய் பரிசு தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
திமுக அமைச்சர் உதயநிதியின் சனாதனம் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக மாநில அமைச்சர் பிரியங் கார்கே மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.