தமிழகத்தில் உள்ள கோயில்களிலிருந்து திருடப்பட்ட பழங்காலச் சிலைகளை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்குக் கடத்திச்சென்று இலட்சங்களிலிருந்து பல கோடிகள் வரை விற்று பணம் சம்பாதித்தவன் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர். தற்போது, சிறைத் தண்டனை பெற்று, தமிழகச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சுபாஷ்கபூரால் கடத்தி செல்லப்பட்ட கிருஷ்ணர் சிலை ஒன்று தற்போது அமெரிக்காவில் உள்ள எச்.எஸ்.ஐ. என்ற புலனாய்வு அமைப்பிடம் உள்ளதைச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
காளிங்கன் எனும் ஐந்து தலை பாம்பின் மீது கிருஷ்ணர் நடனமாடுவது போல் உள்ள இந்தி சிலை கி.பி பதினொன்றாம் நூற்றாண்டில் சோழர்களால் வடிவமைக்கப்பட்டது.
இது, கடந்த 2005-ஆம் ஆண்டு சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவிற்குக் கடத்தி செல்லப்பட்டதும், ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விலை மதிக்கமுடியாத கிருஷ்ணர் சிலையை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டுக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது