“இண்டியா” என்பது மிகவும் அபாயகரமான வார்த்தை. 2004-ம் ஆண்டு “இந்தியா ஒளிர்கிறது” என்று கோஷம் போட்டு நாங்கள் தோல்வியடைந்தோம். தற்போது உங்கள் கூட்டணிக்கு “இண்டியா” என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். ஆகவே, உங்கள் தோல்வி நிச்சயம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்கட்சிகளை விளாசி இருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பா.ஜ.க.வின் 3-வது பரிவர்தன் சங்கல்ப் யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டிலுள்ள 28 கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைந்திருக்கின்றன. அந்த கூட்டணியின் நிலை என்ன? இவர்கள் தங்களது கூட்டணிக்கு “இண்டியா” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், இண்டியா என்பது மிகவும் அபாயகரமான வார்த்தை. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பொற்கால ஆட்சியைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்தியா ஒளிர்கிறது என்று முழக்கமிட்டோம். ஆனால், தேர்தலில் தோல்விதான் மிஞ்சியது. தற்போது உங்களது கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டி இருக்கிறீர்கள். ஆகவே, இத்தேர்தலில் உங்களுக்கு தோல்வி நிச்சயம்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகரில் நடந்த மக்கள் ஆசிர்வாத யாத்திரையில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங், “சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவரது கருத்து மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறது. ஆகவே, தி.மு.க.வின் உறவை காங்கிரஸ் கட்சி துண்டிக்க வேண்டும். அல்லது அவரது கருத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.