பிரேசில் (Brazil) காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் முதன்மையான இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் அடிக்கடி ஏற்படும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு பிரேசில் பகுதியில் வெப்பமண்டல சூறாவளி காரணமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதோடு, சூறாவளி காற்றும் வீசி வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் ரியோ கிராண்டே டோ சுல் (Rio Grande do Sul) மாகாணம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் மட்டும் ரியோ மாநிலத்தில் சுமார் 300 மிமி மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் பெருவெள்ளம் சூழ்ந்ததுடன், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ரியோ கிராண்டே டோ சூல் மாநிலத்தின் ஆளுநர் கூறுகையில், “மழையின் காரணமாக ரியோ கிராண்டே டோ சூல் மாநிலம் இதுவரை இல்லாத அளவு உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 6 பேர் பலியாகியுள்ளனர். அப்பகுதியில், வெள்ளம் வடிந்து வரும் நிலையில், மேலும் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும்” தெரிவித்தார்