சூரியனில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு கருவிகள் சூரியனின் நேர் எதிர் திசையில் நிலைநிறுத்தப்பட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மற்ற மூன்று கருவிகளும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும்.
விசிபில் எமிஷன் லைன் கொரோனாகிராப் எனப்படும் கருவியைப் பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி இயற்பியல் ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கியது. நாளொன்றுக்கு 1,440 புகைப்படங்களை எடுக்கும் இந்தக் கருவி, சூரியனின் வெளிப்புறத்தில் உள்ள கொரோனா பகுதியையும், அதிலிருந்து வெளியேறும் ஆற்றல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும்.
சோலார் அலட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் எனப்படும் இந்தக் கருவி சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியர், குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புறா ஊதா கதிர்கள் குறித்தும், புற ஊதா கதிர்களுக்கு அருகே ஏற்படும் கதிர் வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வு செய்யும்.
சோலேக்ஸ் எஸ் மற்றும் ஹெல் 10 எஸ் ஆகிய கருவிகள் சூரியனிலிருந்து வெளியேறும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்யும். அதேபோன்று அந்தக் கதிர்களின் வாயிலாக உருவாகும் ஆற்றலையும் இதன் மூலம் அறிய முடியும்.
ஆஸ்பெக்ஸ் மற்றும் பாபா என்கிற கருவிகள் ஆதித்யா சூரிய ஆற்றல் துகள் பரிசோதனை கருவி மற்றும் ஆதித்யா பிளாஸ்மா பகுப்பாய்வு கருவி என அழைக்கப்படும் இவ்விரு கருவிகளும் சூரியப் புயல்கள் குறித்தும் அதில் உள்ள ஆற்றல் அயனிகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன.
மேக்னிடோ மீட்டர் என்ற இந்த கருவி, சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள எல்1 புள்ளியில் நிலவும் காந்தப்புலத்தை அளவிடும் திறன் கொண்டது.