நாட்டு மக்களுக்கு சுத்தமான, நம்பகமான மற்றும் மலிவுவிலையில் மின்சாரம் வழங்குவதற்கு தொடக்க ஒதுக்கீடாக 9,400 கோடி ரூபாய் வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க.வும், எதிர்கட்சியான காங்கிரஸும் தேர்தல் யுத்திகள், வியூகங்கள் வகுப்பது உட்பட பல்வேறு விவகாரங்களில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. அந்த வகையில், ஆளும் பா.ஜ.க., மத்திய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
அந்தவகையில், பேட்டர் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்திக்கூறு இடைவெளி நிதித் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. 2030-31-ம் ஆண்டுக்குள் 4,000 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் திறனை பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இத்திட்டம், நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இத்திட்டத்திற்கு 9,400 கோடி தொடக்க ஒதுக்கீட்டில், 3,760 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்ட உதவியாக சாத்தியக்கூறு இடைவெளி நிதி வடிவத்தில் நிதியுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதித்திட்டம், நிலையான எரிசக்தி தீர்வுகளுக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 1 கிலோவாட் மணி நேரத்துக்கு 5.50 முதல் 6.60 ரூபாய் வரை சமநிலைப்படுத்தப்பட்ட சேமிப்பு செலவை அடைய முடியும்.
மேலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் 2017-க்கு 1164.53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீடு 131.90 கோடி ரூபாயாகும். இந்த நிதி 2021-22-ம் நிதியாண்டில் செலவழிக்கப்பட்டது. மேலும், 2028-2029-ம் ஆண்டு வரை உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற கூடுதல் நிதித் தேவை 1,164.53 கோடி ரூபாயாகும். இக்கூடுதல் நிதியை தொழில் வளர்ச்சித் திட்டம் 2017-ன் கீழ் ஒதுக்க, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்பட்டது.
அந்த வகையில், இரு மாநிலங்களிலும் அமைந்துள்ள உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் கணிசமான அளவில் விரிவடைந்துள்ள அனைத்துத் தகுதி வாய்ந்த புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, ஆலை மற்றும் இயந்திரங்களுக்கான முதலீட்டில் 30% மத்திய மூலதன முதலீட்டு ஊக்கத்தொகை 5 கோடி ரூபாய் என்கிற உச்ச வரம்புடன் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.