இன்றைய நவீன உலகின் அறிவியல் வளர்ச்சியால், நாளுக்கு நாள் கண்டுபிடிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்மூலம், ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நெப்டியூன் (Neptune) கோளைத் தாண்டி பூமியைப் போன்ற புதிய கிரகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜப்பானின் கிண்டாய் (Kindai) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா (Patryk Sofia Lykawka), ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மையத்தைச் சேர்ந்த தகாஷி இட்டோ (Takashi Ito) ஆகியோரின் சமீபத்திய ஆய்வில் பூமியைப் போன்றே இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’சூரியக் குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை (Kuiper Belt) என்று அழைக்கப்படுகிறது. இது பனிப்பொருட்களைக் கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை. இந்த கைப்பர் பட்டை பகுதியில் பூமி போன்ற கிரகம் உள்ளது. இதுதொடர்பாக, மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்
மேலும், சூரியக் குடும்பத்தில் மறைந்திருக்கும் 9-வது கிரகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்டகாலமாகக் கூறி வருகின்றனர். ஆனால், நாங்கள் கண்டுபிடித்திருப்பது சர்வதேச விஞ்ஞானிகள் கூறி வரும் 9-வது கிரகம் கிடையாது. இது வேறு ஒரு புதிய கிரகம் என்று கருதுகிறோம்.
சூரியனிலிருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும், சூரியனிலிருந்து புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் இருக்கிறது. இந்த கிரகம் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.