தஞ்சையில், வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வுக்கு வந்தபோது, திமுகவைச் சேர்ந்த ஆதரவு விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா மாவட்டங்களான, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில், குறுவை மற்றம் சம்பா நெற்பயிர் சாகுபடி குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு செய்வது வழக்கம்.
குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் கரம்பை, இராமநாதபுரம், பருத்திக்கோட்டை, தென்னமநாடு, வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, சம்பா மற்றும் மாற்றுப் பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
ஆனால், வேளாண் உற்பதி ஆணையர் வருகை தருவது குறித்து உண்மயான விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
மாறாக, அந்தந்த பகுதியில் உள்ள ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையான விவசாய சங்க தலைவர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர். விவசாயிகளின் உண்மையானப் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
இது குறித்து, காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் கூறுகையில், விவசாயிகளுக்கு எது மாதிரி பிரச்சினை ஏற்படுகிறது, அவை எப்படி ஏற்படுகிறது. அதனைத் தீர்க்க என்ன வழி என்பது குறித்த தகவலை, உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்றால்தான், அவர்கள் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
ஆனால், விவசாயிகளின் உண்மையான பிரச்சினை அரசுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கும் சிலரால் ஆளுங்கட்சிக்கு சாதகமான சங்க நிர்வாகிகளை மட்டும் அழைத்து வந்து விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் காட்ட முயற்சி செய்கின்றனர்.
அதேபோல், வேளாண் ஆணையரும் முறையான அறிவிப்பு கொடுக்காமல் வருகை தந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் குறுவையும், சம்பாவும் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பலன் கொடுக்கவில்லை.
அதேபோல், வேளாண் உயர் அதிகாரிகளும் விவசாயிகளின் நலனை பேனி காப்பதற்குப் பதில், நழுவிச் செல்கின்றனர்.
வேளாண் ஆய்வுக்கு வரும் உயர் அதிகாரிகள், அனைத்து விவசாயச் சங்க நிர்வாகிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கவேண்டும். அனைவரது ஆலோசனையும் கேட்டு, நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் மட்டும் கூறுவதை மட்டும் ஏற்ககூடாது. அப்படி செய்தால், அது, உண்மையான விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும் என்றார்.