மதுரையில் கடிதம் மூலம் மனைவிக்கு தலாக் தெரிவித்த கணவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்தவர் சுல்தான் பாட்ஷா (வயது 30). இவர் தேனியைச் சேர்ந்த வனத்துறை சாலையில் வசித்து வரும் ஹாஜிரா பானுவை, கடந்த 2019-ம் ஆண்டு, ஜனவரி 13-ம் தேதி திருணம் செய்தார்.
திருமணச் சீர்வரிசையாக 40 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளை மாப்பிள்ளை வீட்டாருக்கு, மணமகள் வீட்டார் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகி சில நாட்கள் ஆன நிலையில், சுல்தான் பாட்ஷா தனது மனைவிடம் மேலும், ரூ. 5 லட்சம் தேவை. உங்கள் வீட்டில் வாங்கி வரவேண்டும் என வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு, ஹாஜிரா பானு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால், தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
திருணம் ஆகியும், தம்பதிகளிடையே ஒற்றுமை இல்லாததால் குழந்தையும் பிறக்கவில்லை.
இதனால், சுல்தான் பாட்ஷா தனது மனைவியை அடித்து உதைத்து சித்தரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது மனைவிக்கு கடிதம் மூலம் தலாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஹாஜிரா பானு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் மலரம்மாள் மற்றும் காவலர்கள், சுல்தான் பாட்ஷா மற்றும் அவரது தந்தை அப்துல் சத்தார் மற்றும் தாயார் பாத்திமா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய பெண்கள் நலன் கருதி, முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, முத்தலாக் ஒரு குற்றமாக கருதப்பட்டது. முத்தலாக் கொடுக்கும் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் இந்திய அரசு சட்டம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளதாக இஸ்லாமிய பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.