இந்து மதத்தை அழிப்பேன் என பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், தமிழக ஆளுநர் உதயநிதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில், தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவது, புண்படுத்துவது திமுகவின் வாடிக்கையாகி உள்ளது.
திமுக அரசு தனது தோல்விகளை மறைக்க, மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்ப தனது இளவரசருக்கு மகுடம் சூட்ட இந்துமத எதிர்ப்பு என்கின்ற ஆயுதத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு என்கின்ற கூட்டத்தில் திமுகவின் இளவரசர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்கு, கொரோனா போன்றவற்றுடன் இந்து மத நம்பிக்கைகளை ஒப்பிட்டு அவற்றை ஒழிக்க வேண்டும் என்று பேசி உள்ளார். சமஸ்கிருதத்தையும் எதிர்த்துள்ளார்.
நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் இந்துக்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் சடங்குகள், சம்பிரதாயங்களைக் கொச்சைப்படுத்துவதுடன், அவற்றை ஒழிக்க வேண்டும் என்பதாக உள்ளது. இது நேரடியாக இந்து மதச் சடங்குகளை அழித்து இந்து மதத்தை அழிக்கும் முறையே ஆகும்.
தொடர்ந்து, இந்து மதத்தை எதிர்த்து விமர்சித்துக் கொச்சைப்படுத்தி வரும் திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் கண்டித்தும், உதயநிதி ஸ்டாலின் மீது மாநில அரசாங்கம் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், தமிழக ஆளுநர் உதயநிதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இந்து முன்னணி சார்பில் செப்டம்பர் 7 -ம் தேதி வியாழக்கிழமை மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிப்பு வெளியானது.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும், திமுக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களையம் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.