சனாதன தர்மத்தை அழிப்பேன் என ஆவணத்துடன் பேசிய, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னத்தில் அடித்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என, ஆந்திர மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிப்போம் என பேசியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூடியது. அப்போது, சனாதனம் குறித்த விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி, சக அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே, உத்தரப் பிரதேசம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி சீவினால், ரூ10 கோடி பரிசு தரப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரத்தைச் சேர்ந்த Jana Jagarana Samiti என்ற இந்து அமைப்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னத்தில் காலணியால் அடித்தால், ரூ10 லட்சம் பரிசு தரப்படும் என்று அறிவித்துள்ளது.
கூடவே, உதயநிதி ஸ்டாலின் படத்தையும் அவர் முகத்தில் காலணியால் அடிப்பது போன்ற படத்தையும், டிஜிட்டல் பேனரில் வைத்துள்ளனர்.
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்த டிஜிட்டல் பேனர், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.